நடிகை ராதா எங்கே போனார் ரஜினியுடன் நடித்த கடைசி படம்
*ராஜாதி ராஜா (1989)*
இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கர் அவர்களின் பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் 1989ம் ஆண்டு மார்ச் மாதம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற படம் ராஜாதி ராஜா. படத்திற்கான கதையை எழுதி இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். திரைக்கதை வசனம் பஞ்சு அருணாச்சலம். படத்தில் இரு வேடங்களில் ரஜினி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ராதா மற்றும் நதியா நாயகிகளாக நடித்திருந்தனர். 5 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் மீண்டும் இணைந்த இந்த படம் ராதாவிற்கு அவருடன் ஜோடியாக நடித்த கடைசி படமாகவும் அமைந்தது. நதியா இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் மேலும் படத்தில் விஜயகுமார், வினு சக்கரவர்த்தி, ராதா ரவி, ஜனகராஜ், ஆனந்தராஜ், ஒய்.விஜயா, ஜி.சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
எஸ்டேட் அதிபரை கொலை செய்து, சொத்தை அடைவதற்காக அவரின் இரண்டாவது மனைவியும், தம்பியும் சதி திட்டம் தீட்டுகிறார்கள். வெளி நாட்டிலிருக்கும் அவரது மகன் இதை அறிந்து கொண்டு இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்காக ஊருக்கு வருகிறான். ஊரில் இருக்கும் தன் நண்பனின் துணையோடு இதை நிறைவேற்ற முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக நண்பனின் கொலை வழக்கில் சிக்கி கொண்டு சிறைக்கு செல்கிறான். பின் சிறையிலிருந்து தப்பி ஊரில் அவனை போலவே தோற்றத்திலிருக்கும் இன்னொரு இளைஞனின் உதவியோடு சதி திட்டத்தை முறியடித்து இருவரும் அவரவர் காதலிகளுடன் ஒன்று சேர்வது தான் கதை. படத்தின் கதை ஒன்றும் புதுமையாக இல்லாமல், ஏற்கனவே பார்த்த படங்களின் கதையமைப்பை ஒட்டியிருந்தாலும், சுவாரசியமான நகைச்சுவை காட்சிகளுடன் கூடிய திரைக்கதையால் படம் ஜனரஞ்சக படமாக கலகலப்பாக எடுக்கப்பட்டு எல்லோரையும் கவர்ந்தது. படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த ரஜினி ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்லாமல் நகைச்சுவை காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடித்த ராதா, நதியா நடிப்பும், வில்லனாக நடித்த ராதாரவி, கிராமத்து ஆட்களாக வரும் வினு சக்கரவர்த்தி, ஆனந்தராஜ் ஆகியோரின் நடிப்பும் நன்றாக அமைந்திருந்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசையமைப்பில் அமைந்த பாடல்கள். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி படம் வெளி வந்த கால கட்டம் மட்டுமல்லாமல் இப்பொழுதும் அடிக்கடி ஒலிபரப்பாகி கொண்டிருக்கிறது.
தொலைகாட்சி சானல்களில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் படம் இது. அன்றாடம் ஏதாவதொரு சானலில் இந்த படம் ஒளிபரப்பாகி கொண்டே இருக்கிறது.