கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பி.டி.செல்வகுமாருக்கு பாராட்டு விழா!
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பி டி செல்வகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள்.
நிகழ்வில் அப்பாவு அவர்கள் பேசியபோது, ''என்னுடைய உறவினர் தம்பி பி டி செல்வகுமார் கலையுலகில் கண்ணியத்துடனும், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் பயணிக்கிறார். அதற்காக பாராட்டுகிறேன். பி டி செல்வகுமார் கடந்த பல வருடங்களாக கன்னியாகுமரி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடத்துகிறார். 3006 பெண்கள், 3006 பானைகளில் பிரமாண்டமாக சமத்துவ பொங்கல் வைப்பார்கள். பிரமாண்டமாக நடக்கும் அந்த நிகழ்வுக்கு நான் போய் வந்ததுண்டு.
அதேபோல, காமராஜரைப் போல கல்விப் பணியிலும் அவரது ஈடுபாடு அதிகம். கன்னியாகுமரியில் வெள்ளாளன்விளை, பொட்டல்விளை, மணக்குடி, இலந்தையடிவிளை, கோவளம் என்று பல ஊர்களில் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், நிரந்தர கலையரங்கங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். மயிலாடி என்று ஒரு ஊர் உண்டு. அங்குள்ள பள்ளியில் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் மெக்காலே பிரபு மூலம் மெக்காலே கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியில்கூட பி டி செல்வகுமார் கட்டடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே அதையெல்லாம் செய்ய முடியும். சமூகத் தொண்டோடு, அரசியலில் திமுகவின் அறிவாலயத்தை நாடி வந்திருக்கிறார். அவர் காலம் முழுக்க சுய மரியாதையுடன் நடத்தப்பட்டு மக்கள் தொண்டாற்றுவார். அவரது மக்கள் பணி தொடர வாழ்த்துகள்'' என்றார்.
