-

Loading latest news...

மதுரையில் MGR .சிவாஜி ரசிகர்கள் மோதல் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்

 மதுரையில் MGR .சிவாஜி ரசிகர்கள் மோதல் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்


மதுரை சினிமா ரசிகர்கள் ! தெருக்களில் சுவர்கள் மீது ஒட்டப்பெறும் திரைப்படப் போஸ்டர்கள், வெகுசனப் பண்பாட்டில் முக்கியமான இடம் வகித்தன. திரைப்படக் காட்சிகள், இடம் பெற்றுள்ள போஸ்டர் முன் நின்று உற்றுப்பார்த்துக் கிளுகிளுப்பு அடைந்து ஒவ்வொரு வாரமும், இரண்டாவது வாரம், மூன்றாவது வாரம் என ஒட்டப்படும் போஸ்டர்கள் ரசிகர்களின் நாடி நரம்பினை முறுக்கேற்றின. அதிலும் 25 நாட்கள், 50 நாட்கள், 100 நாட்கள், வெள்ளிவிழா என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ரசிகர்களுக்கு போதையைத் தந்தன. திரைப்படப் போஸ்டர்கள் உருவாக்கிய ரசிக மனநிலைபற்றிச் சொல்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன.
திரைப்படம், படப்பதிவு இன்று தொடங்குகிறது என்று தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரத்துடன் வெளியாகும் அறிவிப்பு, ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற்றி விடும். திரைப்படத்தைத் தயாரிப்பது எந்த நிறுவனம் என்பது தொடங்கி, மதுரையில் எந்த நிறுவனம் படத்தைத் திரையரங்கில் விநியோகிக்கப்போகிறது என்பது வரை நுட்பமான தகவல்களை, விளம்பரத்தின்மூலம் வாசித்து, ரசிகர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். திரைப்படத் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து எப்பொழுது வெளியாகுமோ என்று மனத்தவிப்புடன் ரசிகர்கள் இருந்தனர். பெரும்பாலும் பொங்கல், தீபாவளி நாளில் புதுப்படங்கள் வெளியாகும். அவற்றில் எந்த நடிகரின் படம் வெற்றியடையும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். திரைப்படம் வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்னரே பகலிலும், இரவிலும் பட விநியோகஸ்தர், விளம்பரம் மூலம் ‘தூள்’ கிளப்புவார். சுமார் 10ஜ்8 அளவிலான திரைப்பட விளம்பரத் தட்டிகள் இரண்டினைக் கூம்பு வடிவில் இணைத்து, கீழே இரு சக்கரங்களில் நகரும் வண்டியில் வைத்து, ஏழெட்டு வண்டிகளை ஒன்றின் பின்னால் ஒன்றாகத் தள்ளிக்கொண்டு வருவார்கள். ஊர்வலத்தின் முன்னர் பேண்டு வாத்தியம் அல்லது கொட்டு மேளம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதே ஊர்வலம் இரவு வேளையெனில் தட்டிகளின் இருபுறமும் ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்குகள் ஏந்திய சிலர் நடந்து வருவார்கள். வழியெங்கும் திரைப்படம் பற்றிய துண்டுப்பிரசுரம் தெருவிலிருப்போருக்கு வழங்கப்படும். பெரிய நடிகரின் திரைப்பட வெளியீடு எனில், ஊர்வலத்தின் முன்னால், கரகாட்டக் கலைஞர்கள் ஆடிக்கொண்டு நடந்து போவார்கள். திரைப்படம் வெளியாகும் திரையரங்கின் முன்னர் வண்ணக் காகிதக் கொடிகள் குறுக்கிலும் நெடுக்கிலும் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் அரங்கின் முன்னர் கூடிநின்று கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலும் ஏற்கெனவே படத்தின் பாடல்கள் இசைத்தட்டுகள் மூலம் பிரபலமாகி இருந்தால் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு கூடிவிடும். காலையில் 10-30 மணிக்கு முதல் காட்சியாகப் பிரபல நடிகரின் புதுத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது என்பதை அறியும் ரசிகர்கள் முதல்நாள் மாலையிலிருந்தே திரையரங்க வாயிலில் இருக்கும் கவுண்டர் முன்னர் காத்துக் கிடப்பார்கள். இரவு முழுக்கத் தூங்காமல், அல்லது அரைகுறையாகத் தூங்கி நுழைவுச் சீட்டுக்காகக் காத்திருப்போரில் திருமணமானவர்களும் கலந்து இருப்பார்கள். சென்ட்ரல் திரையரங்கில் 0.90 காசு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காகக் காத்திருக்கும் கல்பாவிய சின்னச் சந்தில் மூத்திர வீச்சமடிக்கும் அந்த வாடையைச் சகித்துக்கொண்டு பன்னிரண்டு மணிநேரம்கூடக் காத்திருக்கும் ரசிகர்கள் இருந்தனர். இரவில் பனி கொட்டினாலும் அல்லது மழை தூறினாலும் வரிசையில் காத்துக் கிடப்பது தவமிருப்பது போலிருக்கும். காலையில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்னர் திரையரங்கு வாயில் போர்க்களம் போலக் காட்சியளிக்கும். சீருடை அணிந்த காவலர்கள் கையில் கம்புடன் வரிசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார்கள்.
நீளமான வரிசை இருக்கும்; தள்ளுமுள்ளு இருக்கும். கையில் கம்புடன் குட்டையான ஆள் ஒருவர், வரிசையில் ஒழுங்கு மீறும்போது, சகட்டுமேனிக்கு வன்முறையைப் பிரயோகித்து ஒழுங்கை நிலைநாட்டுவார். எப்படியோ இடித்துத் தள்ளிக் கவுண்டருக்குள் நுழைந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள், ஏதோ சாகசம் புரிந்தவர்கள் போலத் திரையரங்கினுள் நுழைவார்கள். திரைப்படம் திரையில் தோன்றியது முதலாக ‘விசில்’ ஒலி காதைப் பிளக்கும். ஒரே கைதட்டல் வேறு கேட்கும். முதல் காட்சியில் அபிமான நடிகர் தோன்றும்போது, காகிதம் அல்லது பூக்களை ஒளிக்கற்றை மீது எறிந்துவிட்டு, பெஞ்சின் மீது ஏறி நின்று கூச்சலிடுவார்கள். முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தேன் என்ற பெருமையுடன் திரையரங்கினை விட்டு வெளியேறுகிறவர்களின் முகத்தில் பெருமை பொங்கும். திரையரங்க வாயிலில் காத்திருக்கும் கும்பலில் சிலர், ‘படம் எப்படி?’ என்று ஆவலுடன் விசாரிப்பார்கள். ‘படம் வெள்ளிவிழாதான், ‘பாட்டு, சண்டை தூள்’ என்று சொல்வதைக் கேட்டவுடன், அடுத்த காட்சிக்காகக் காத்திருப்போர் மிகவும் சந்தோஷமடைவார்கள். மதுரையிலுள்ள திரையரங்குகளில் பொதுவான அம்சம், படம் பிடிக்கவில்லை என்றால் ‘கட்டை’யைக் கொடுப்பது இயல்பாக நடக்கும். படம் மெலோடிராமாவாக - இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்போல- மெல்ல நகரும்போது, திடீரென ஒரு குரல்கேட்கும், ‘பருத்திப்பால்’ என்று. எங்கும் சிரிப்பொலி படரும். அப்புறம் ‘கட்டிலு... கட்டிலு....’ என யாராவது கூச்சலிடுவார்கள். மீண்டும் சிரிப்பலை. எங்கும் திரைப்படம் ஏதாவது ‘கமெண்ட்’ அடிப்பது பெரும்பாலும் வரவேற்கக் கூடியதாகவே இருக்கும். திரைப்படம் என்பது தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவியிருந்தது என்பதற்கு அத்தாட்சி, புதிதாகத் ‘திருமணம்’ ஆன தம்பதியினர் புதுப்படத்திற்குச் செல்வது என்பது கட்டாயம். சிலவேளைகளில் தம்பதிகள் தனித்தோ அல்லது பெருங்கும்பலுடனோ திரையரங்கினுக்கு வருவார்கள். பொதுவாக, மாலைக் காட்சிக்கு நுழைவுச் சீட்டுக் கிடைப்பது சிரமம். எனவே ‘பிளாக்’கில் கூடுதல் கட்டணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொள்வது நடைமுறையில் இருந்தது. அதிலும் வணிக நிறுவனங்கள் நிறைந்த மதுரையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் ‘நுழைவுச் சீட்டு’ வாங்குவது கஷ்டம். ஒரு திரையரங்கில் ‘அரங்கு நிறைந்தது’ என்ற அறிவிப்பு தொங்கவிடப்பட்டவுடன், பக்கத்திலிருக்கும் வேறொரு திரையரங்கை நோக்கிப் படையெடுப்பார்கள். நுழைவுக் கட்டணம் பெண்களுக்கு 0.55 பைசா; ஆண்களுக்கு 0.80, 0.90 பைசா, மாடியிலிருந்து பார்க்க 1.15, 1.45, 2.30. மதுரையிலுள்ள தங்கம் தியேட்டர் ஆசியாவிலே மிகப்பெரியது. 0.90 காசு டிக்கட்டை மூன்று கவுண்டர்களில் கொடுப்பார்கள்.

இன்று ‘கிரிக்கெட்’ பற்றிய பேச்சு இளைஞர்களிடையே நிலவுவதுபோல, எழுபதுகளில் கூட திரைப்படம் பற்றிய பேச்சுகள் இருந்தன. தங்களுக்குப் பிடித்த நடிகர் நடித்து வெளியான திரைப்படங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் பேசுபொருளாக இருக்கும். தமிழகமெங்கும் திரையிட்ட பல திரையரங்குகளிலும் நூறு நாட்கள் ஓடிய படம் ‘மதுரைவீரன்’, சென்ட்ரல் திரையரங்கில வந்தது . படத்தின் ஒரு மாதவசூல் பற்றிய கணக்கு, நாடோடி மன்னன் திரைப்படம் யாழ்ப்பாணத்திலும் பெற்ற வசூல்.... இப்படியான பேச்சுகளைப் பேசுவதில் கில்லாடிகளாக இருந்தனர். இவை மட்டுமின்றி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் பற்றியும் அலுக்காமல் பேசித்திரிந்த ரசிகர்களின்