நந்திவர்மன் _ விமர்சனம்
ஏகே ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக அருண்குமார் தனசேகரன் தயாரிக்க, ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “நந்திவர்மன்”.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னரான நந்திவர்மன் செஞ்சி பகுதியில் கட்டிய மிகப்பெரிய சிவன் கோயில் ஒன்று சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்து விட்டது.
இது குறித்தான ஆய்வுகளை மேற்கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வெங்கட் போஸ் அந்தப் பகுதிக்கு வருகிறார். அவருடன் சில தொல்லியல் துறை மாணவர்களும் வருகின்றனர்.
கோவில் புதையுண்டு இருப்பதாக கருதப்படும் இடத்தில் தங்கம் வைரம் வைடூரியம் நிறைந்த புதையலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் ஊர் மக்கள் யாரும் நடமாடுவதில்லை.
காரணம் சில அமானுஷ்ய சக்திகள் அங்கு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
எனவே கோவிலை ஆய்வு செய்ய அவர்கள் அனுமதிக்க மறுப்பதுடன் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார். தொடர்ந்து தொல்பொருள் ஆய்வுக்கு வந்த மாணவி ஒருவரும் கொல்லப்படுகிறார்.இந்தக் கொலைகள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி புலன் விசாரணை மேற்கொள்ள, அவருக்குதொல்லியல் துறை மாணவி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்கிறார்.
கொலைகளை நடத்தியது யார்? கோவிலுக்கு அடியில் புதையல் கிடைத்ததா? என்பதை படத்தின் பிற்பகுதி விளக்குகிறது.
சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி தொல்லியல் துறை மாணவி ஆஷா வெங்கடேஷ் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட ஈடுபாடு, வழக்கமான காதல் காட்சிகள் போல் அல்லாமல் ரசிக்கத் தக்க வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
ஊர் பெரியவர் கெஜராஜ் சிதிலமடைந்த கோவில்களுக்கெல்லாம் சென்று புனரமைப்பு பணிகளை செய்து வருவதாக ஆரம்பத்தில் சொல்லப்படுவதும், பின்னர் அவரது உண்மையான முகம் என்னவென்று பார்வையாளர்களுக்கு புரிய வருவதும் நல்ல திருப்பம்.
நாயகிக்குரிய அழகான முகத்தோற்றம் கொண்ட ஆஷா வெங்கடேஷ் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
அளவெடுத்து தைத்த ரெடிமேட் சட்டையை போல போலீஸ் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் சுரேஷ் ரவி. அவரது மிடுக்கான தோற்றமும் மிக இல்லாத உடல் மொழியும் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்திருக்கின்றன.
நாயகன், நாயகி, எதிர்மறை நாயகன் என்று இருந்தாலும் யாருக்குமே அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் இல்லை. கதைக்கு தேவையான அளவில் மட்டுமே அவர்களது வேடத்தை வடிவமைத்து பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பெருமாள் வரதன்.பல படங்களில் பார்த்து சலித்து போன சிலை திருட்டு புதையல் தேடுதல் என்று இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து குறைந்த பட்ஜெட் செலவில் திரைப்படமாக்கியதற்காக இயக்குனர் பெருமாள் வரதனை பாராட்டத்தான் வேண்டும்.
சேயோன் முத்துவின் ஒளிப்பதிவும் ஜெரால்டு பீலிக்ஸின் இசையமைப்பும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன.
