கள்வன் சினிமா விமர்சனம்
‘கள்வன்.’காடு, யானை, துரோகம்,காதல்,பாசப்பிணைப்பு என பரபரக்கும் கதையம்சத்தால் மனதைக் கவர்கிற ‘கள்வன் அது அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள, ஊருக்குள் யானைகள் வந்துபோகிற ஆபத்தான கிராமம். அங்கு வசிக்கிற இளைஞன் கெம்பன் தன் நண்பனுடன் சேர்ந்து திருடுவதும், குடிபோதையில் மிதப்பதுமாய் நாட்களைக் கடத்தி வருகிறான். அப்படி ஒருநாள் திருடப் போன வீட்டில் ஒரு அழகான இளம்பெண்ணைப் பார்க்க, தமிழ் சினிமா வழக்கப்படி அவள் மனதைத் திருடும் முடிவுக்கு வருகிறான்.
நினைத்தபடி அவனால் அவள் மனதைத் திருட முடிந்ததா இல்லையா என்பது கதையின் சுவாரஸ்யமான ஒரு டிராக்…
அந்த திருடன், ஒரு பெரிய திட்டத்தை மனதில் வைத்து ஆதரவற்ற பெரியவர் ஒருவரை முறைப்படி தத்தெடுக்கிறான். அவர் தன்னோடு சேர்ந்து வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான்.
அவர் மூலம் அவனது திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பது கதையின் அதிர்ச்சியும் திருப்பங்களும் நிறைந்த மற்றொரு டிராக்… இயக்கமும் ஒளிப்பதிவும் பி.வி.ஷங்கர்
கதையின் நாயகனாக ஜீ.வி.பிரகாஷ். திருடுவதை ஜாலியாக செய்பவர், கதாநாயகி மீது காதல் வயப்படும்போது விழிகளில் பொருத்தமான தவிப்பைக் கடத்துகிறார். கதையிலிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனத்தனமும் காட்டியிருக்கிறார்.
மனதைக் கொள்ளையடிக்கும் விதத்தில் சிரிப்பைச் சிந்துகிற இவானா, முந்தைய படங்களைவிட மேக்கப் குறைத்திருக்கிறார். தன்னைக் காதலிப்பவனின் சுயரூபம் தெரிந்து கொதித்துக் கொந்தளிக்கும் காட்சியில் நடிப்பில் தேர்ச்சியடைந்திருக்கிறார். பாடல் காட்சியில் கூடுதல் புத்துணர்ச்சி தெரிகிறது. தன் வீட்டில் திருடியவர்களை அவர்களுக்குத் தெரியாமல் தன் வீட்டிலேயே இரவு முழுவதும் சிறை வைப்பது கலகலப்பு.
ஆதரவற்றோர் இல்லத்திலிருக்கும்போது பலமாக ஊதினாலே செத்துப் போய்விடுவார் என்பதுபோல் தளர்ச்சியாய் தள்ளாடித் திரியும் பாரதிராஜா, தன்னைத் தத்தெடுத்த ஜீ.வி.பிரகாஷை சொந்த பேரனாக நினைத்து விரட்டி விரட்டி வேலை வாங்கும்போது உற்சாகம் ஊறியவராய் மாறுவது ரசிக்க வைக்கிறது. அந்த பேரனின் சுயநலம் தெரிந்தும் அதை பொருட்படுத்தாமல் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கவும், விரும்பிய பெண்ணை மணமுடித்து வைக்கவும் அக்கறையோடு அடியெடுத்து வைக்கும் செயல்பாடுகள் உருக வைக்கின்றன. பார்வையால் புலியைத் துரத்துவது, குரலசைவால் யானையை அடக்குவது என்றெல்லாம் பலமாக பணிகளும் கொடுக்கப்பட அதையும் முடிந்தவரை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குநர் இமயம்.
கதாநாயகனின் நண்பனாக, நிழல்போல் ஒட்டிக் கொண்டிருக்கிற தீனா அளவான நடிப்பால் கவனம் ஈர்க்க, மற்ற நடிகர் நடிகைகளும் நிறைவான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துப் பாடியிருக்கும் அடி கட்டழகு கருவாச்சி பாடல் சொக்க வைக்க, மற்ற பாடல்கள் கதைக்களத்தை மெருகேற்ற உதவியிருக்கின்றன. ரேவாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு வேகம் தந்திருக்கிறது.
பசுமைக்குப் பஞ்சமில்லாத காட்டின் அழகை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது இயக்குநர் பி.வி.ஷங்கரின் கேமரா.
துரத்தும் யானைகளிடமிருந்து கதாநாயகன் தப்பிக்கிற நிறைவுக் காட்சியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.
அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று எதிர்பார்க்க வைக்கிற கதையை உருவாக்கிய இயக்குநர், அதற்கேற்ற அழுத்தமான திரைக்கதையை உருவாக்க இன்னும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்.
கள்வன் வெல்வான்! Kalvan Cast & Crew
G.V.Prakash Kumar
Bharathi Raja
Ivana
Dheena
G. Gnanasambandam
Vinoth Munna
Technical Crew
Production House - Axess Film Factory
Producer - G. Dilli Babu
Cinematography & Direction - P.V. Shankar
Songs Music - G.V. Prakash Kumar
Background Music - Revaa
Editing - San Lokesh
Art - N.K. Rahul
