Bison movie review
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் பைசன் படம் எப்படி இருக்கு.? திரை விமர்சனம் இதோ! நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ளது. பா.ரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்துள்ளார். ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கபடி வீரர் மணத்தி கணேசனின் உண்மையான கதைமற்றும் அதில் பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் சேர்த்து ஒரு எமோஷனலான அரசியல் டிராமா படத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். படத்துக்கு படம் மனித குலத்தின் சாதிய வேறுபாடு அவலத்தை பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், பைசன் படத்தில் அதை ஸ்போர்ட்ஸ் பின்னணியில் இன்னும் வீரியத்தோடு சொல்லி இருக்கிறார். விளைவு, இந்த ஆண்டின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக பைசன் வெளிவந்துள்ளது. துருவ் விக்ரம் இந்த படத்துக்காக தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து கடுமையான உழைப்பை கொட்டி இருக்கிறார். இவருடைய அர்ப்பணிப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் பளிச்சிடுகிறது. பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன் என ஒவ்வொருவரும் கொடுத்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பசுபதி முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிப்பை இந்த படத்தில் வழங்கி இருக்கிறார். அமீர் வரும் காட்சிகள் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
மாரி செல்வராஜின் வசனங்கள் ஒவ்வொன்றும் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன. பார்க்கும்போதே பல கேள்விகளை மனதில் எழுப்புகின்றன. நட்பு, காதல், துரோகம், ஏற்றத்தாழ்வு.. இவைதான் மாரி செல்வராஜின் ஒவ்வொரு படைப்புகளிலும் ஆணிவேராக இருக்கும். அது இந்த படத்திலும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. இடைவேளை காட்சி, கபடி காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி என படத்தில் ஏகப்பட்ட 'வாவ்' தருணங்கள் உள்ளன. சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தை மிக நேர்த்தியான கமர்சியல் திரைக்கதையில் சொல்லி மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
மொத்தத்தில் 'பைசன்' - சீறி பாய்கிறது
