-


Loading latest news...

பூங்கா" திரைப்பட விமர்சனம்

 பூங்கா" திரைப்பட  விமர்சனம்

"பூங்கா" திரைப்பட 

விமர்சனம்!


கதைக்களம் பூங்கா. படப்பிடிப்பு பூங்கா. பெரும்பாலான நடிகர்கள் பூங்கா நடைவாசிகள்.


பூங்காவில் காதல், மோதல், நட்புக்கும் இடையே ஒரு பந்தம் உருவாக்கி, மண் மீது சொர்க்கம் பூங்கா தான் என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்.


கதைநாயகன் சிவா உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். சேர்ந்து வசிக்கிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு சிவா பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை சிவா கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் அடித்து உதைக்கிறான். சிவாவுக்கு அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறான்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா?


இப்படி பல கேள்விகள். அதற்கான பதில்கள் என விரிகிறது பூங்காவின் கதைக்களம்.


சிவாவாக கெளஷிக். வாலிபப் பருவத்தின் தொடக்கத்திலிருக்கிற இளமையுடன் காதலில் ஈடுபடும்போது அழகாகத் தெரிகிறார். கோபம் கொந்தளிக்கும்போது புயலாய் மாறி தாக்குதல் நடத்துகிறார். பாடல் காட்சியில் ரசிக்கும்படி ஆடுகிறார். எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.


சிவாவுடன் இணைந்து பணிபுரிபவராக, அவரது மனதைப் பறித்துக் கொண்டவராக, செய்யும் வேலையில் ஈடுபாடு, காதலுக்குத் தேவையான மயக்கம், கிறக்கம், அசத்தலாய் நடனம் என தன் பங்களிப்பை ஜோராக செய்திருக்கிறார் ஆரா.


பிராணா வீட்டின் எதிர்ப்பை மீறி காதலில் ஈடுபடுவது, குடிப்பழக்கமுள்ள காதலனுக்கு தன் நினைவாக வைத்துக் கொள்ள உயர் ரக மதுபானம் வாங்கிக் கொடுப்பது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது என கவனம் பெறுகிற காட்சிகளை எளிமையான நடிப்பால் நிரப்பியிருக்கிறார். அவரது காதலனாக வருகிற சசி தயா வாட்டசாட்டமாக, லட்சணமாக இருக்கிறார்; பிராணாவை உயிருக்குயிராக காதலிப்பதும், காதலியின் உயிருக்கு ஆபத்து எனும்போது பதறுவதும், ஹீரோவிடம் அடி உதை படுவதும் அவரது கடமை. அதை கெத்தாக செய்து கடந்துபோகிறார்.


பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், கோவிந்தராஜ், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் உள்ளிட்டோர் நண்பர்களாக, பூங்காவில் நட்பாகி சொந்த பந்தம்போல் மாறுகிறவர்களாக, அரசியல் ஆளுமையாக என மற்ற கதாபாத்திரங்களை ஏற்று அப்படியும் இப்படியுமாக வந்து போகிறார்கள்.


நட்பு, காதல், காமெடி என ஜனரஞ்சகமாக செல்கிறது பூங்கா.


நா.முத்துக்குமார் முன்பு எழுதிய இரண்டு பாடல்களை இந்தப் படத்தில் பயன்படுத்தி உள்ளார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஸ்ரீகாந்த் தேவா ஒரு பாடல் பாடியுள்ளார்.


அகமது விக்கியின் இசையில் 'சிக்கிமுக்கிக் கல்லு' டூயட் பாடலும், பூங்காவின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும் 'ஹேப்பி பார்க் டே' பாடலும் உற்சாகமூட்டுகின்றன. பின்னணி இசை கதைக்களத்திற்கு போதுமானதாக இருக்கிறது.


காதல், அடிதடி, மேடையமைத்து கல்யாணம் என பெரும்பாலான சம்பவங்கள் ஓரே பூங்காவில் நடப்பதாக இருந்தாலும் ஆடியன்ஸுக்கு சலிப்பேற்படாதபடி தன் கேமரா கோணங்களை அமைத்து காட்சிகளுக்கு ஆழகூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.ஹெச்.அசோக்.


'எங்கும் கிடைக்காத நட்பை, உறவை, சந்தோஷத்தை பூங்காக்களில் சுற்றித்திரிகிற மனிதர்கள் மூலம் பெற முடியும்' என்பதை காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்லி, ஆடியன்ஸை ஹேப்பி ஆக்கியிருக்கிறார், படத்தின் இயக்குனர் கே.பி.தனசேகர்.