Thaai Kizhavi movie Review 
தாய் கிழவி ராதிகாவின் அழியாத சொத்து சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் அதேபோல் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூடு (DUDE) படமும் பெண்ணிய சுதந்திரத்தை பேசியது, அதன் தொடர்ச்சியாக தாய்க்கிழவி படமும் பெரியாரின் பெண்ணிய சுதந்திர கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
தாய் கிழவி பவுனு தாயாக நடித்திருப்பது ராதிகாதானா என்று கேட்கும் அளவுக்கு அவரது தோற்றமும் நடிப்பும் இமயத்தை தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது கையில் தடி வைத்துக்கொண்டு தோரணையாக சிரித்தபடி நடந்து வரும் ராதிகா ரோட்டில் வம்பு செய்பவர்களை அடித்து விரட்டி ஓட விடுவது சனாதன சங்கிகளை பெரியார் தனது தடியால் அடித்து ஓடவிட்டது போல தெறிக்க விடுகிறார்.
ராதிகாவின் ஆட்டம் தொடக்கத்தில் சில காட்சிகளில் தொடர இவரது ஆர்ப்பாட்டம் கடைசி வரை இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று அவரை படுக்கையில் கிடத்தி இப்ப நடி பார்க்கலாம் என்று டைரக்டர் சவால் விட, அதை தனது அசால்ட்டு நடிப்பால் ஊதி தள்ளி விடுகிறார். படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்பது போல் படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்திருக்கிறார். இந்த வருடம் ராதிகாவுக்கு விருதுகள் ஆண்டாக இருக்கும் என்பது உறுதி.
கிளைமாக்சில் தனது மருமகள்கள், மகள் ஆகியோரை அழைத்து எப்படி பெண் பிள்ளைகள் இந்த சமுதாயத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்காக சொல்லும் வார்த்தைகளில் அரங்கமே கைதட்டலில் நிறைகிறது குறிப்பாக வாழவெட்டியாக தன் வீட்டில் இருக்கும் மகளின் தாலியை கழற்றி அவளை கைவிட்ட கணவனின் முகத்தில் தூக்கி எறிந்து விட்டு தன் மகளை முனீஸ்காந்த்துக்கு திருமணம் செய்து வைத்து ராதிகா ஆசீர்வதிக்கும்போது பெண்களின் வாக்குகளை ஒரேயடியாக அள்ளிக் கொள்கிறார்.
முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பால சரவணன், இளவரசு , முத்துக்குமார் தவிர அந்த மதுரவீர சாமி பூசாரி தொடங்கி கடைசியாக ஆர்த்தி எடுக்கும் பாட்டிகள் வரை உன்னதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். தாய் கிழவி படம், ராதிகா தான் பிரதான கதாபாத்திரம் வேறு பெரிய ஸ்டார்கள் கிடையாது, பெண்ணியம் தான் கதையின் முக்கிய கரு என்று ஒரு இயக்குனர் சொல்லும்போது எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு நிமிடம் யோசித்து விட்டு ஒதுங்கத்தான் செய்வார்கள் ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் கருவை புரிந்து கொண்டு இதுதான் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய கதை என்பதை முடிவு செய்து தயாரிப்பாளராக களம் இறங்கி எந்த ஒரு கமர்சியல் அம்சத்தையும் சேர்த்து சினிமாத்தனம் ஆக்காமல் சொல்ல வந்த கருத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் எப்படி சொல்ல எண்ணினாரோ அப்படியே சொல்லுங்கள் என்று சுதந்திரத்தை கொடுத்தது தான் இந்த படத்திற்கு வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
நடிகராக ஒரு பக்கம் தன்னை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தாய் கிழவி, கொட்டுக்காளி போன்ற படங்களை தயாரிப்பதன் மூலம் தன்னை ஒரு அர்த்தமுள்ள தயாரிப்பாளராகவும் நிரூபித்து வருவது அவரது தனி சிறப்பு.
நிவாஸ் கே பிரசன்னா இசை விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
*Cast*
Radikaa Sarathkumar
Singampuli
Aruldoss
Munishkanth
Bala Saravanan
Ilavarasu
Muthukumar
George Maryan
Raichal Rabecca
*Crew*
Director: Sivakumar Murugesan
Producer: Sudhan Sundaram & Sivakarthikeyan (Passion Studios & Sivakarthikeyan Productions)
Music: Nivas K. Prasanna
Cinematography: Vivek Vijayakumar
Editor: San Lokesh
Makeup Designer: N Chelladurai Alangudi