-

Loading latest news...

முஸ்தபா முஸ்தபா’ திரைப்பட விமர்சனம்

 

முஸ்தபா முஸ்தபா’ திரைப்பட விமர்சனம்

Casting :
Sathish, Suresh Ravi, Monica Chinnakotla, Maanasa Choudhary, Livingston, Uma, Pugazh, Super Good Subramani



Directed By : Praveen Saravanan


Music By : M.S.Jones Rupert


Produced By : The Mapogos Company - Pradeep Mahadevan



 

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணியாற்றும் நாயகன் சதீஷும், டாக்டரான நாயகி மோனிகா சின்னகொட்லாவும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் சதீஷ், பொய் சொன்னதற்கே காதலை துண்டித்த மோனிகாவுக்கு விசயம் தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், திருமணத்திற்கு முன்பாக எப்படியாவது அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, அந்த வீடியோவின் பின்னணி மற்றும் அதை யார், எதற்காக இணையத்தில் பதிவேற்றினார்கள் ? என்பதை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘முஸ்தபா முஸ்தபா’.  கதையின் நாயகன் என்றாலும், காமெடியை முன்னிறுத்தி பயணித்துள்ள சதீஷ், கண்டதும் காதல், காதலை காப்பாற்ற பொய், அந்த பொய்யினால் ஏற்பட்ட பிரிவு, பிரிவை சரி செய்யும் முயற்சி, அதையடுத்து திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை சரி செய்ய எதிர்கொள்ளும் போராட்டங்கள், என்று அனைத்து ஏரியாவிலும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். 

 

சதீஷின் நண்பராக, படத்தின் மற்றொரு ஹீரோவாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, தனது வேலையை குறையின்றி செய்திருக்கிறார். படம் முழுவதும் வரும் சுரேஷ் ரவி, சதிஷுக்கு இணையான வேடம் மட்டும் இன்றி, அவருக்கு இணையாக காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

 

நாயகர்களின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பவர், படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

சுரேஷ் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி சில இடங்களில் தலை காட்டுவதோடு சரி, மற்றபடி திரைக்கதையில் அவருக்கு பெரிய வேலை இல்லை. சதீஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லாவும் ஆரம்பத்தில் தலைகாட்டி, ஒரு பாடல் காட்சியில் வலம் வந்து, இறுதிக் காட்சியில் தலை காட்டுவதோடு தன் நாயகி வேலையை முடித்துக் கொள்கிறார். சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சில இடங்களில் சிரிக்க வைக்க உதவியிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளையும் அழகாகவும், பிரகாசமாகவும் காண்பித்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடு கேட்கும் ரகமாக இருக்கிறது. குறிப்பாக அந்த பார்ட்டி இசை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், தன் வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் சரவணன், பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தனது நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சிக்கு படத்தின் முதல் பாதி கைகொக்டுத்திருந்தாலும், இரண்டாம் பாதி சற்று தடுமாற செய்கிறது.

 

சதீஷ், சுரேஷ் ரவி மற்றும் கருணாகரன் ஆகியோரது எதார்த்தமான நகைச்சுவை காட்சிகள் முதல் பாதி பாடத்தை கலகலப்பாக நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதியிலும் இவர்களே படத்தை சுமந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் சற்று சலிப்படைய வைத்து விடுகிறது. இருந்தாலும், வீடியோ ஒன்றை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வித்தையை இயக்குநர் பிரவீன் சரவணன் மிக சரியாகவே செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘முஸ்தபா முஸ்தபா’ ஓகே பா....