-

Loading latest news...

மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம்

 மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம்

Casting : Priyanka Arul Mohan, Park Hye‑jin, No Ho‑jin, Rishikanth, Jang Jaehyeon



Directed By : Ra. Karthik



Music By : Hesham Abdul Wahab



Produced By : Rise East Entertainment - Srinidhi Sagar




 


பள்ளி பருவத்தில் கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் கவரப்படும் பிரியங்கா அருள் மோகன், அந்த நாட்டுக்கு ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வளர்த்துக் கொள்கிறார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர், தன் வாழ்க்கையில் காதல், அதனால் வரும் பிரச்சனைகள் என்று பல விசயங்களை எதிர்கொண்டாலும், கொரியா ஆசையை கைவிடாமல் இருக்கிறார்.



 


இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் கொரியா நாட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், மகிழ்ச்சியாக செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துயரத்துடன் செல்லும் அவர், அங்கு சென்ற பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துக் கொள்கிறார். பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலரால் ஏமாற்றப்பட்டு, திரும்பவும் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். தான் பயணிக்க ஆசைப்பட்ட நாட்டில் இருந்தாலும், புரியாத மொழி, அறியாத மக்கள் என அச்சத்தில் கலங்கி நிற்கும் பிரியங்கா அருள் மோகனின் வாழ்க்கையில் கொரியா எத்தகைய மாற்றங்களை நிகழ்த்துகிறது, என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘மேட் இன் கொரியா’.


 


கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், அளவான நடிப்பு மூலம் படம் முழுவதையும் தனி ஆளாக சுமந்திருக்கிறார். இயற்கை எழில் மிகு ஊட்டி மற்றும் நவீனமயமான கொரியா, என இரண்டு வெவ்வேறு களங்களில் காட்சிகள் பயணித்தாலும், அனைத்திலும் பிரியங்கா மோகன் கொள்ளை அழகுடன் வலம் வருகிறார். சிரிப்பு, அழுகை, காதல், சோகம், மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், தயக்கம், தன்னம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது அளவான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கும் பிரியங்கா அருள் மோகன், குறைகளை கூட மறந்து படத்தை ரசிக்கும் மனநிலைக்கு பார்வையாளர்களை மாற்றி விடுகிறார்.



 


சிறிய வேடங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் அவர் தன் வேலையை சரியாக செய்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.


 


பார்க் ஹே-ஜின் (Park Hye‑jin), நோஹூ ஜின் (No Ho‑jin), ஜாங் ஜேஹியான் (Jang Jaehyeon) ஆகிய கொரியா நாட்டு நடிகர், நடிகைகள் மற்றும் பிரியங்காவின் பெற்றோராக நடித்திருக்கும் தமிழ் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள் எந்த இடத்தில் கேமரா வைத்தாலும் அழகாக தெரியும் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலும், அந்த களங்களுடன் சேர்த்து கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தி முழு படத்தையும், கண்களுக்கான விருந்தாக ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார். 


 


ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் பயணித்து, திரைக்கதையில் இருக்கும் உணர்வுப்பூர்வமான விசயங்களை பார்வையாளர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.


 


மெதுவாக நகரும் திரைக்கதை என்றாலும், அதில் நிரம்பியிருக்கும் உணர்வுகள் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.


 


வேகமும், விறுவிறுப்பும் இன்றி திரைக்கதை பயணித்தாலும், ஊட்டி மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் மேகங்கள் மற்றும் உடலைத் தழுவிச் செல்லும் குளிர்ந்த காற்றின் அனுபவம், பனி மழையினால் வெள்ளிச் சிதறல்களாய் ஜொலிக்கும் இரவு மற்றும் கண்கள் கூச செய்யும் பொன்னிற காலை, என கொரியாவை காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை மெய்மறந்து படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.



 


பிரியங்கா அருள் மோகன் என்ற ஒருவரை சுற்றி கதை நடந்தாலும், அவர் சார்ந்த கதாபாத்திரங்களுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், அந்த வேடங்களில் பிரபலமானவர்களை நடிக்க வைக்காமல், வளர்ந்து வரும் கலைஞர்களை நடிக்க வைத்து, அந்த கதாபாத்திரங்களை படம் பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார். 


 


பயணங்கள் மற்றும் புதிய உறவுகளின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அழகியலோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், வாழ்க்கையில் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை நேர்மறையான எண்ணத்தோடு எதிர்கொண்டால் அவை நம் வாழ்வை வசந்த காலமாக மாற்றும் என்ற நம்பிக்கையை விதைத்து வெற்றி பெற்றிருக்கிறார். 

மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ தரமான தயாரிப்பு