-

Loading latest news...

Kaakkee circus Review

 Kaakkee circus Review 

துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக இருக்கும் முனீஷ்காந்த், குற்றவாளிகளை திருத்துவது தான் சிறைச்சாலையின் பணி என்பதை நம்புகிறார். எனவே, சிறைச்சாலையில் சிறிய அளவிலான நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருப்பவர், சிறை கைதிகளிடம் தான் எழுதிய புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்வதோடு, குற்ற சம்பவங்களுக்கான தீர்வுகளையும் தான் படிக்கும் புத்தகத்திலேயே தேடுகிறார். அவருடன் காவலராக பணியாற்றுகிறார் சுபாஷ் செல்வம். இந்த நிலையில், சிறைச்சாலையில் இருக்கும் கோவில் உண்டியலில் இருக்கும் பணம் திருடப்படுகிறது. சிறைச்சாலையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளியே தெரிவதற்கு முன்பு பணத்தை இருக்கும் இடத்தில் வைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு காவலர் சுபாஷ் செல்வம் தள்ளப்படுகிறார். இதனால், வங்கியில் கடன் பெற்று அந்த பணத்தை கோவில் உண்டியலில் போட முடிவு செய்கிறார். அதன்படி கடன் பெற்று அந்த பணத்தை தன் வீட்டில் வைத்திருக்க, அங்கேயும் உண்டியல் திருடன் கைவரிசை காட்டுகிறார். கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுத்த சுபாஷ் செல்வம், திருடன் யார் ? என்பதை கண்டுபிடித்தாலும், அவரை எதுவும் செய்ய முடியாத நிலையில் சிக்கி தவிக்கிறார். எப்படியாவது திருடனை ஆதாரத்துடன் பிடித்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் சுபாஷ் செல்வம், அதை எப்படி செய்கிறார் ? என்பதை எதிர்பாரத திருப்பங்கள் மற்றும் நகைச்சுவை மூலம் சொல்வது தான் ‘காக்கி சர்க்கஸ்’.


 


சிறை கண்காணிப்பாளர் முனீஷ்காந்த், காவலர் சுபாஷ் செல்வம், திருடன் ராஜேஷ் மாதவன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுடன், சிறைச்சாலை கோவில் உண்டியலும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டு, அதற்கான ஒரு சுவாரஸயமான கதையோடு, அனைத்து அத்தியாயங்களையும் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சுவாரஸ்யம்என விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் அமீன் பாரிப்.


 


கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வம் இரண்டு பேரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்கள். 


 


முனீஷ்காந்த், வழக்கமான தன் உடல்மொழி மற்றும் நகைச்சுவை பாணியை தவிர்த்துவிட்டு, கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பது அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, ஒரு நடிகராக தன்னை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். சிறை காவலராக நடித்திருக்கும் சுபாஷ் செல்வம், கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தியிருப்பவர் காமெடி பாணி என்றாலும், தனது அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் மிரட்டியிருக்கிறார். திருடனை பிடிக்கும் காட்சிகள் நகைச்சுவையாக பயணித்தாலும், சுபாஷின் வேகம் மற்றும் படபடப்பு நகைச்சுவையை தாண்டி, ஆக்‌ஷன் த்ரில்லர் உணர்வை கொடுக்கிறது.


 


திருடராக நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன், மிக எளிமையான மனிதராக வலம் வந்தாலும், பணத்திற்காக அல்லாமல் பெயருக்காக திருடுவதும், அதில் இருந்து தப்பிப்பதும் தொடரின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது.


 


கதாநாயகிகளாக நடித்திருக்கும் வின்சு ஷாம் மற்றும் கெளதமி ஆகியோர் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் உள்ளிட்ட தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறார்கள்.


 


ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, இசையமைப்பாளர் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர், படத்தொகுப்பாளர் அர்ஜுன் பாபு ஆகியோரது பணி தொடரின் தரத்தை அதிகரிக்கச் செய்து, பார்வையாளர்களை கதையுடன் பயணிக்க வைக்கிறது.


 


எளிமையான கருவுக்கு பல கிளைக்கதைகளுடன் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் அமீன் பாரிப், கோவில் உண்டியலையும் ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து, அதற்கான பின்னணி கதையோடு ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். சிறைச்சாலைக்குள் எப்படி திருட்டு ? என்ற கேள்வியை வைத்துக் கொண்டு, திருடனுக்கான பின்னணி மற்றும் அவர் யார்? என்பது தெரிந்தும் போலீஸிடம் சிக்காமல் தப்பிப்பதற்கான சூழலை உருவாக்கிய விதம், தொடரின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்வதோடு, திருடன் எப்போது, எப்படி சிக்குவார் ? என்ற கேள்வியோடு, அடுத்தடுத்த அத்தியாயங்களை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது.


 


புத்தகம் படிக்கும் நல்ல பழக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் முனீஷ்காந்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் இயக்குநர் அமீன் பாரிப், அதே சமயம் புத்தகமே வாழ்க்கை ஆகிவிடாது, சில சூழ்நிலைகளை எதார்த்தமாக கையாள வேண்டும், என்ற பாடத்தை நகைச்சுவையாக சொல்லி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.சிறைச்சாலைக்குள் இருக்கும் கண்ணகி கோவில் மற்றும் அதன் உண்டியல் திருட்டு, முதல் நான்கு அத்தியாயங்களை நகைச்சுவையோடு நகர்த்தினாலும், பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளோடு வேகமாக பயணிக்கிறது. திருடன் யார் ?, எதற்காக சிறைச்சாலை கோவில் உண்டியலில் திருடினார் ? என்பது தெரிந்தாலும், அவரை எப்படி பிடிக்கப் போகிறார்கள் ? என்ற கேள்வி அடுத்த மூன்று அத்தியாங்களை எதிர்பாரத திருப்பங்களோடும், வித்தியாசமான நகைச்சுவை காட்சிகளோடும் நகர்த்தி சென்று ரசிக்க வைக்கிறது.


 


மொத்தத்தில், ‘காக்கி சர்க்கஸ்’ கலகலப்பும், விறுவிறுப்பும் நிறைந்த தொடர். Casting : Subash Selvam, Munishkanth, Rajesh Madhavan, Gowthami, Vinsu Rache, Savithri, Amrudha, Abdul Lee, Maruthupandiyan, Rakesh, Ushar, Vigneshwar, Arunkumar, Pavumba, Chiththirasenan



Directed By : Ameen Barif



Music By : Vibin Baskar and Xavier



Produced By : Rise East Entertainment - Sreenidhi Sagar