-

Loading latest news...

’ஜி.டி.என்’ திரைப்பட விமர்சனம்

 ’ஜி.டி.என்’ திரைப்பட விமர்சனம்


ஜி.டி.நாயுடு யார் ? என்பது பற்றி தமிழ் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் மேலோட்டமாக அல்லது பொது அறிவு சார்ந்த சிறு கட்டுரையாக படித்திருப்போம். ஆனால், ஜி.டி.நாயுடு என்ற சாதனையாளர் அந்த சிறு கட்டுரைக்குள் அடங்க கூடியவர் அல்ல, அவர் உலக நாடுகள் கொண்டாடிய மாபெரும் விஞ்ஞானி மற்றும் தொழில்துறை வல்லுநர் என்பதையும், அவரது கனவுகள் எப்படி சிதைக்கப்பட்டது, அவரது சாதனைப் பயணத்திற்கு இடையூறுகள் யாரால் வந்தது ? என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘ஜி.டி.என்’.


கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் வயது முதல் அவரது இறப்பு வரை பயணிக்கும் கதையில், அவர் மேற்கொண்ட சாதனைகள் மட்டும் இன்றி அவர் எதிர்கொண்ட சோதனைகளையும் திரை மொழியில் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.


ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்தாலும், இந்திய அரசு அவரை எந்தவிதத்திலும் அங்கீகரிக்காமல் இருந்ததோடு, அவரது கனவுகளை சிதைக்கும் செயல்களில் எப்படி ஈடுபட்டது, என்பதை தைரியமாக சொலியிருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், நாம் அறிந்திராத பல விசயங்களை எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார்.


ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன், தனது ஸ்டைலிஷ் மற்றும் கம்பீரமான தோற்றத்தின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். வீரபாண்டியன் கட்டபொம்மன் என்றால் எப்படி சிவாஜி கணேசன் நினைவு வருகிறதோ, அதுபோல் ஜி.டி.நாயுடு என்றால் முதலில் மாதவன் முகம் தான் நினைவுக்கு வரும். ஜி.டிநாயுடுவின் இளமைக்கால தோற்றம் மற்றும் முதுமைக்கால தோற்றம் என இரண்டிலும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஜி.டி.நாயுடு இப்படி தான் இருந்திருப்பாரோ…!, என்று பார்வையாளர்கள் வியக்கும் வகையில் மாதவன் நடித்திருக்கிறார்.


ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்திற்குப் பிறகு அம்பலவானா கிருஷ்ணன் என்ற வரித்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ஜெயராம் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். காமெடி கலந்த நடிகராக பார்த்த ஜெயராம், இதில் வில்லத்தனம் கலந்த நடிப்புடன், ஒரு நேர்மையான அதிகாரியின் கோபத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களிடம் பாராட்டு பெறுகிறார்.


ஜி.டி.நாயுடுவின் நண்பராக சிதம்பரம் பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜின் தோற்றம் மற்றும் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம், மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா, ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.


ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலக்கட்டத்திற்கு தன் கேமரா மூலம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன், ஜெர்மனி பயணம் மற்றும் ஹிட்லரிடம் விருது வாங்குவது போன்ற காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மிக சரியாக கையாண்டு வியக்க வைத்திருக்கிறார்.ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலத்துச் சூழலை மீட்டெடுக்கும் விதமாகப் பழமை மாறாத கருவிகளின் ஒலியையும், நவீன முறையையும் இணைத்து இசையமைத்திருக்கும் கோவிந்த் வசந்தாவின் இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருப்பதோடு, ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுவதும் வலம் வருகிறது. எந்த ஒரு இடத்திலும் இசையின் தனித்தன்மை தெரியாமல் பயணிக்கும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


தனிமனிதனின் வாழ்க்கை வரலாறு கதை என்றாலும், அதை முழுக்க முழுக்க கமர்ஷியல் சினிமா பாணியில் பயணிக்க வைத்திருக்கும் படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா மற்றும் கே.சசி குமார் ஆகியோரது பணி சிறப்பு.


தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் ஆகியோரது பணி படம் முழுவதும் பேச வைக்கிறது. பழைய வாகனங்கள் முதல் கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் ஆடை, அவர்களது பின்னணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என அனைத்தையும் மிக கவனமாக கையாண்டிருப்பவர்கள் கடினமாக உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.


கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோரது திரைக்கதை ஜி.டி.நாயுடு பற்றிய பல விசயங்களை திரைமொழியில் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறது. ஜி.டி.நாயுடுவின் பயணம் மற்றும் சாதனையோடு, அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை திரை மொழியில் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கும் திரைக்கதையாசிரியர்கள், வரித்துறை சம்பவங்களை திரும்ப திரும்ப பேசுவதும், அது தொடர்பான காட்சிகளை ரிப்பீட் மோடில் கையாண்டிருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது.


இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், பல்வேறு பயணங்களை கொண்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை எளிமையான முறையில் சொல்லியிருந்தாலும், காட்சிகளை கவனமாக கையாண்டு ஒரு நேர்த்தியான படமாக கொடுத்திருக்கிறார்.


ஜி.டி.நாயுடுவின் சாதனைகளும், சோதனைகளும் ஒரு பக்கம் இருந்தாலும், இறுதியில் தன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் போடும் திட்டம் சற்று நெருடலாக இருக்கிறது. அதே சமயம், வெற்றிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் தொழிலதிபர்களுக்கு மத்தியில் தனது கனவுகள் சிதைக்கப்பட்டாலும் சரி, தனது சாதனைப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும் சரி, ”தவறான வரியை செலுத்தி, எதிர்கால தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக இருக்க மாட்டேன்”, என்ற கொள்கையுடன் வாழ்ந்த ஜி.டி.நாயுடுவை இந்த படம் மூலம் இந்தியாவும் கொண்டாடும்.


மொத்தத்தில், ‘ஜி.டி.என்’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.