நடிகர்கள்: சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: பா. ரஞ்சித் ரேட்டிங்: 3.5/5 சென்னை: தங்கத்தை தேடி எடுக்க வெள்ளையர்களுக்கு உதவும் தங்கலானாக சியான் விக்ரம் படம் முழுவதும் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டி எடுத்து விட்டார். இந்த படத்தை சியான் விக்ரமின் நடிப்புக்காக மட்டுமே ரசிகர்கள் தாராளமாக தியேட்டர்களுக்கு சென்று பார்க்கலாம்
பா. ரஞ்சித் ஏன் கோலார் தங்க சுரங்க கதையை கையிலெடுத்தார் என்பதற்கு படம் முழுவதும் அவர் தனது சாதிய அரசியல் பற்றிய வரலாற்றை புத்தர் மற்றும் நாட்டார் வழிபாட்டு முறையில் ஓங்கி ஒலித்திருக்கிறார்
சியான் விக்ரம் ஒரு ஹீரோ என்றால் இன்னொரு ஹீரோவாக ஜி.வி. பிரகாஷ் தனது பின்னணி இசையால் படத்தை முதல் காட்சியில் இருந்து கடைசி எண்ட் கிரெடிட்ஸ் வரை பின்னணி இசையால் தாங்கி பிடித்திருக்கிறார். உண்மையான பூர்வகுடி மக்களின் வாழ்வியலையும் அவர்கள் படும் வலியையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியையும் உணர்த்தும் கதையில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
தங்கலான் கதை: கோலார் பகுதியில் தங்கத்தை தேடி பல அரசர்கள் அலைந்த நிலையில், ஆங்கிலேயர்களும் தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். வட ஆற்காடு பகுதியில் வேப்பூர் கிராமத்தில் உள்ள மக்கள் தான் தங்கத்தை எடுக்க சரியான ஆட்கள் என ஆங்கிலேய துரையான கிளெமண்ட் (டேனியல் கால்டாகிரோன்) தங்கலான் (சியான் விக்ரம்) இருக்கும் கிராமத்துக்கு வருகிறான். தங்கலான் தனது மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் தனது குழந்தைகள், மக்கள் என விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்