-


Loading latest news...

அஸ்திரம் படம் திரை விமர்சனம்..

 அஸ்திரம் படம்  திரை விமர்சனம்..  


நல்ல நாவல் படித்த உணர்வு..ஷ்யாமின் அஸ்திரம் படம் தமிழ் திரையுலகில் கிரைம் த்ரில்லர் படங்களுக்கு பஞ்சமே இல்லை. இப்படி ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையாக உருவாக்கி உள்ளது, அஸ்திரம். புதுமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஷ்யாம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இது, வரும் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.   வயிற்றை கிழித்துக்கொண்டு தற்கொலை செய்யும் 3 பேர், இதை விசாரிக்கும் காவல் அதிகாரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி. இறுதியில் நடந்தது என்ன? இதுதான் படத்தின் கதை  கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் ஷ்யாம். ஒரு செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க போகும்போது, யாரோ ஒருவர் தோள்பட்டை சுட அதனால் வீட்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் வரும் கேஸ்தான், மூன்று பேர் வயிற்றை கிழித்துக்கொண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்வது. இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை என்பதை அறியும் ஷ்யாம், இவர்கள் மூவருக்கும் பொதுவாக இருப்பது நன்றாக செஸ் விளையாடும் திறமைதான் என்பதை அறிந்து கொள்கிறார்   தனது உதவியாளர் சுமனின் உதவியுடன் இந்த வழக்கை எப்படியாவது தீர்த்து விட வேண்டும் என்று நினைக்கும் அவர், இதற்காக இரவு பகல் பாராமல் உழைக்கிறார். திடீரென்று இவரை பார்க்க வரும் இவருக்கு பழைய கிளாஸ்மேட் விஜய், ஷயாமுக்கு மட்டுமே தெரிந்த வழக்கின் விசாரணைகளை மனப்பாடமாக சொல்கிறார். இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும் என்று கேட்க, அவர் கண் முன்னிலையில் அந்த பழைய நண்பரும் தன் வயிற்றை கிழித்துக்கொண்டு உயிரிழக்கிறார். சாவதற்கு எதற்கெல்லாம் மார்டின்தான் காரணம் என்று கூறிவிட்டு இறக்கிறார்.‌ யார் அந்த மார்ட்டின்? அவருக்கும் ஷ்யாமுக்கும் என்ன சம்பந்தம்? மர்மமான முறையை நடக்கும் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுடன் நகற்கிறது மீதி படம்   நல்ல நாவல் படித்த உணர்வு:

கிரைம் த்ரில்லர் நாவல் விரும்பிகளுக்கு ஏற்ற வகையில் உருவாகி இருக்கிறது இந்த திரைப்படம். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், போகப்போக வேகம் கூடுகிறது. இதனால், அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என்பது குறித்த ஆவலும் அதிகரிக்கிறது. படம் முழுவதும் ஏதோ ஒரு ராஜேஷ்குமார் நாவலுக்குள் நாமே சென்று விட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஒரு மினி பட்ஜெட்டில் எப்படிப்பட்ட இன்வ்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் படத்தை கொடுக்க முடியுமோ அதை டீசண்டாக கொடுத்துள்ளனர்.

பலம் என்ன?

சுந்தரமூர்த்தியின் மிரட்டலான பின்னணி இசை, படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. இரவு நேர காட்சிகளை படம்பிடித்த கேமரா, ஃப்ளாஷ் பேக்கில் வரும் கிராஃபிக்ஸ் “நல்லா பண்ணியிருக்காங்கப்பா” என்று சொல்ல வைக்கிறது.   மன்னர் காலத்து கதை, வசிய முறை குறித்து உண்மை கதைகளை படத்தில் காண்பித்த விதம் கதை எழுதிய டீம் நன்றாக வேலை பார்த்துள்ளார்கள் என்பதை காட்டியது. இறுதி ட்விஸ்ட் எதிர்பாராதது.நிறைய கிரைம் த்ரில்லர் படங்களை பார்ப்பவர்கள், அல்லது அதுபோன்ற நாவல்களை படிப்பவர்களுக்கு இந்த படத்தில் என்ன திருப்பம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கும் வகையில் இருந்தது. ஷ்யாம், இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியான நடிப்பை காண்பித்திருக்கலாம். பாடல்கள் கொஞ்சம் வேகத்தடையாக இருந்தன.

முக்கிய பாத்திரங்களில் நடித்த ஷ்யாம், நடிகை நிராவை விட, இளம் வயது வில்லனாக வரும் விதேஷ் யாதவ், அனைவரையும் பயமுறுத்துகிறார். கான்ஸ்டேபிள் கேரக்டரில் வரும் சுமந்த் சரியான தேர்வு. ஆனால், ஷ்யாமை தவிர அனைவரும் புது முகங்களாக தெரிகின்றனர். மேலும், இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் என்றாலே, கொடைக்காணலில்தான் நடக்க வேண்டுமா? வேறு நகரங்களில் எல்லாம் கொலையே நடக்காதா என்று கேள்வி கேட்க தோன்றுகிறதா?    ஒரு டீசண்டான கிரைம் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் படத்தை பார்க்க நினைத்தால், எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக்கொள்ளாமல் இந்த படத்தை போய் பாருங்கள்.