நாங்கள் (பட விமர்சனம்) நடிப்பு: அப்துல் ரஃபி, மிதுன், ரித்திக் மோகன், நிதின், பிரார்த்தனா ஸ்ரீகாந்த், ஜான் எடத்தட்டில், ராக்ஷி
தயாரிப்பு: ஜி. வி. எஸ். ராஜு
இசை: வேத் சங்கர் சுகவனம்
ஒளிப்பதிவு: அவினாஷ் பிரகாஷ்
இயக்கம்: அவிநாசி பிரகாஷ்
பிஆர்ஓ: நிகில் முருகன் பொருளாதார இழப்பு காரணமாக மனைவியைப் பிரிந்து தனது மூன்று மகன்களுடன் தனிமையில் வசிக்கிறார் பள்ளி நிறுவனர் ராஜ்குமார் (அப்துல் ரஃபி). மகன்களை ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும் என்பதற்காக கடுமையான கண்டிப்பு காட்டுகிறார். இந்நிலையில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் வருகிறார். ஆனால் அவரை ராஜ்குமார் ஏற்க மறுத்து தந்தை வீட்டுக்கே திருப்பி அனுப்புகிறார். “எனக்கு வெளி மாநிலத்தில் வேலை கிடைத்திருக்கிறது அங்கு செல்லவிருக்கிறேன் என்னுடன் வந்தால் நீங்கள் நல்ல படிப்பை படித்து எதிர்காலத்தை பிரகாசமாக்கி கொள்ளலாம்” என்று மகன்களுக்கு தந்தை கண்டிஷன் விதிக்கிறார். அந்த கண்டிஷனை மகன்கள் ஏற்கிறார்களா? அல்லது தாயுடன் இருக்க விரும்புகிறார்களா ?என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஓடும் படமாக உருவாகி இருந்தாலும் கமர்சியல் அம்சம் என்பதற்கு எந்த ஒரு காட்சிகளும் கிடையாது. முழுக்க முழுக்க ஒரு தந்தை மூன்று பிள்ளைகளுக்கு இடையே நடக்கும் தினசரி சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதை பொருளாதார இழப்பு காரணமாக பணத்தை இழந்த தந்தை அப்துல் ரஃபி தனது வீட்டில் மின்சார இணைப்பு கூட இல்லாமல் வாழ வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகிறார். ஆனாலும் அவரது பிள்ளைகள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு, வெளியில் இருந்து வீட்டு தேவைக்கு தண்ணீர் பிடித்து வந்து வைத்து விட்டு பின்னர் பள்ளிக்கு சென்று படிப்பதை வழக்கமாக செய்கின்றனர்.
தந்தையின் கண்டிப்பு அதிகரித்ததையடுத்து பிள்ளைகள் தாயை தேடி செல்வதும் ஆனால் அங்கு தாங்கள் பள்ளிக்கு செல்வதற்கு கூட வசதி இல்லாத நிலையில் மீண்டும் வேறு வழி இல்லாமல் தந்தையிடமே திரும்பி வந்து வாழ்க்கையை வாழப் பார்ப்பது எதார்த்தம்..
தன் வீட்டு நாய் இறந்து விட்டது என்பதற்கு துக்கம் தொண்டையை அடைக்க கதறி அழும் ஹீரோ அப்துல் தனது மனைவியை வீட்டை விட்டு துரத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் கேள்விக்குறி.. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையான காட்சிகள் ப்ரேம் பை ப்ரேம் மெல்ல மெல்ல நகர்கின்றன. ஒவ்வொரு காட்சியை பார்ப்பதற்கும் பொறுமை அவசியம். விருது படம் அல்லது எதார்த்தமான படங்கள் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் நாங்கள்.
ஜி வி எஸ் ராஜு படத்தை தயாரித்திருக்கிறார்
படத்திற்கு உயிர் மூச்சாக அமைந்திருக்கிறது வேத் சங்கர் சுகவனம் இசை. அதேபோல் அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு
பாலுமகேந்திரா பட காட்சிகளை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறது. இயக்குனர் பொறுப்பையும் அவிநாசி பிரகாஷ் ஏற்றிருக்கிறார். காட்சிகளை எதார்த்தம் மாறாமல் படமாக்கி இருப்பதுடன் லைவ் சவுண்ட் என்ற முறையில் அனைத்து வசனப்பதிவு பணிகளையும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே செய்திருப்பது நேர்த்தியான முயற்சி..