-


Loading latest news...

சாவீ’ திரைப்பட விமர்சனம்

 சாவீ’ திரைப்பட விமர்சனம்


Casting : Udhaya Deep, Aadhesh Bala, Yasar, Master Ajay, Kavitha Suresh, Prem S.Seshatri



Directed By : Antony Ajith



Music By : Saran Raghavan, VJ Raghuram



Produced By : Antony Ajith Productions




 


நாயகன் உதய தீப், தனது தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்ததாக நினைத்து அவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதே சமயம், மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, அவரது ஒரு மாமன் விபத்தில் இறந்து விடுகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் பின்னணி மற்றும் காணாமல் போன பிணம் என்ன ஆனது, என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்வதே ‘சாவீ’. சாவு வீடு என்ற தலைப்பை ’சாவீ’ என்று மாற்றியிருக்கிறார்கள். புதிய தலைப்புக்கும் கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல் தான், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், என்பது ஆரம்பத்தில் புரியாத புதிராக இருந்தாலும், இறுதியில் ஒரு நல்ல மெசஜோடு, பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் என்பது புரிகிறது.


 


நாயகனாக நடித்திருக்கும் உதய தீப், வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில், கடினமான சூழல்நிலைகளை அசால்டாக கடந்து போகும் பருவத்தை பக்குவமாக கையாண்டு சிரிக்க வைக்கிறார். 


 


போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் பியூட்டியாக இருக்கிறது. யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.


 


இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் இருவரது பின்னணி இசையும் அளவு. 


 


ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம் குறைவான விளக்குகளை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருந்தாலும்,  காட்சிகளை எளிமையாகவும், இயல்பாகவும் படமாக்கி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.  படத்தொகுப்பாளர்கள் சுந்தர்.எஸ் மற்றும் ராகேஷ் லெனின் இருவரது பணியிலும் குறையில்லை.


 


எழுதி இயக்கியிருக்கும் ஆண்டனி அஜித், ஒரு சிறிய சம்பவத்தை வைத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைக்கதையை பிளாக் காமெடியாக கொடுத்திருக்கிறார்.


 


காணாமல் போன பிணம் கிடைத்ததா ? இல்லையா ? என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு இயக்குநர் ஆண்டனி அஜித், பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு, தற்போது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை கலாச்சாரம் மற்றும் அதன் ஆபத்து பற்றி திரை மொழியில் சொல்லி இளைஞர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.


 


மொத்தத்தில், ‘சாவீ’ சாவு வீடு மூலம் உயிர்களை காப்பாற்றும் முயற்சி