ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம்
Directed By : Rajasekar.G
Music By : Arunagiri
Produced By : Arun Visualz - Covai Ramesh
நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவர் இடையே ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. காதல் காமத்தில் முடியும் போது, நாயகன் தான் ஏற்கனவே அக்கா வயதுள்ள ஒரு பெண்ணுடனும், ஆண்டி வயதுள்ள ஒரு பெண்ணுடம் உடலுறவு வைத்துக் கொண்ட உண்மையை காதலியிடம் சொல்கிறார். இதனால் கோபமடையும் காதலி, இவனை இப்படியே விட்டால், காமலீலைகளை தொடர்ந்துக் கொண்டே இருப்பான் என்பதால், கல்யாணம் செய்து கணவனாக்கிக் கொள்கிறார்.
தன் காதல் கணவனை அழைத்துக் கொண்டு கோத்தகிரியில் உள்ள தன் வீட்டுக்கு நாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு, தன் மனைவி மூலம் கிடைக்கப் போகும் குடும்பத்தை காண ஆவலோடு செல்லும் த்ரிகுண், அங்கு தன் மனைவியின் அக்கா இனியா மற்றும் அம்மா ராதாவை பார்த்ததும், பேரதிர்ச்சி அடைகிறார். அவரது அதிர்ச்சிக்கான காரணம் என்ன ?, அதிர்ச்சியில் இருந்து மீண்டாரா? இல்லை அவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியை எதிர்கொண்டாரா? என்பதை அடல்டு காமெடியாக சொல்வதே ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’. இப்படி ஒரு கதையில் நாயகனாக நடித்திருக்கும் த்ரிகுணின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அடல்டு காமெடி படத்தில் நடிப்பது பெரிதல்ல, ஆனால் இப்படிப்பட்ட ஒரு சில்மிஷமான சிந்தனையோடு எழுதப்பட்ட கதையில் பயணித்திருப்பது பெரிய விசயம் மட்டும் அல்ல, நாயகனுக்கு மூச்சு முட்டவும் செய்திருக்கும்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் அறிவுரை மூலம் காதலனை கட்டிலில் சாய்ப்பதும், அவர் செய்த தவறை மன்னித்து மீண்டும் மீண்டும் அவருடன் நெருக்கம் காட்டுவதும் என்று, இப்படி ஒரு பெண் காதலியாகவும், மனைவியாகவும் அமைவது தான் இறைவன் கொடுத்த வரம், என்று பார்வையாளர்களை ஏங்க வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தன் முகத்தை மட்டும் இன்றி உடல் அங்கங்களையும் காட்டி பார்வையாளர்களை கிரங்கடிக்கும் இனியா, உதட்டோடு உதடு முத்தமிட்டு, ”பாடம் சொல்லிக் கொடு”, என்று நாயகனிடம் கேட்கும் டியூசன் டீச்சராக நடித்து பரங்கிமலை ஜோதியையே தோற்கடிக்கும், கவர்ச்சி மலையாக பார்வையாளர்களை மயக்குகிறார்.
‘சுந்தாரா டிராவல்ஸ்’ படத்தில் இளமையாக இருந்த போது கூட ராதாவை இப்படி ரசித்திருக்க மாட்டார்கள் போல, அம்மணி இந்த படத்தில் ஆண்டியாக வந்து அதிரடி காட்டியிருக்கிறார்.
தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், காம நெடி அதிகம் இருப்பதால், இவர்களது காமெடி குறைவாகவே தெரிகிறது. சி.விஜயின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பளிச்சென்று இருக்கிறார்கள். அவர்களது பிரகாசம் காட்சிகளிலும் இருப்பதால், படம் முழுவதும் ஒரே வண்ணமயம் தான்.
அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காம காட்சிகளை தூக்கலாக காட்டியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் கே.குமார், அதிஷ்ட்டசாலி தான். பார்வையாளர்களுக்கே இவ்வளவு காட்டியிருக்கிறார் என்றால், அவர் எவ்வளவு பார்த்திருப்பார்...! எழுதி இயக்கியிருக்கும் ராஜசேகர்.ஜி, அடல்டு காமெடி என்ற பெயரில் அசிங்கமான சிந்தனையை, ஆபாசமாக சொல்லியிருந்தாலும், அதை இலை மறை காய் மறையாக சொல்லியதோடு, காமெடி பின்னணியில் சொல்லி இளைஞர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
யார் என்று தெரியாமல் நாயகன் செய்ததை ஏற்றுக்கொண்டாலும், உண்மை தெரிந்த பிறகு விலகி செல்ல முயற்சிக்கும் நாயகன் உடன், தொடர்ந்து பழக துடிப்பது போல் பெண் கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பது, காமத்தை தாண்டிய வக்கிரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், உறவு முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்தாலும், அதற்கு காமெடி என்ற போர்வையை போர்த்தி, மேலோட்டமாக சொல்லி சமாளித்திருக்கும் விதம் படத்தை முகம் சுழிக்காமல் பார்க்க வைத்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களும், சில நேரடியான வசனங்களும் இளைஞர்களை சிரிக்க வைத்து குஷிப்படுத்தும் விதமாக இருக்கிறது. படத்தின் மையக்கரு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்தாலும், அதை கமர்ஷியலாக இளைஞர்கள் கொண்டாடும் விதமாக சொல்லியிருப்பதோடு, கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் இடையே இருக்கும் எல்லையை சரியாக கணித்து காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராஜசேகர்.ஜி, படம் தொடங்கியது முதல் முடியும் வரை திரையரங்கில் சிரிப்பு சத்தமும், கைதட்டல் சத்தமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்படி படத்தை இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ செம மேட்டர்.
