-

Loading latest news...

பூக்கி’ திரைப்பட விமர்சனம்

 பூக்கி’ திரைப்பட விமர்சனம் 

Casting : Ajay Dhishan, R. K. Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya Kathir Vivek Prasanna, Black Pandi, Bigg Boss Sathya, M. J. Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi,Priyanka



Directed By : Ganesh Chandra



Music By : Vijay Antony



Produced By : Vijay Antony Film Corporation - Fatima Vijay Antony, Meera Vijay Antony




 


டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலம் அன்பானவர்களை அழைக்கும் ஒரு வார்த்தையாக பிரபலமான ‘பூக்கி’ காதலர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியதோடு, ஒருவருக்கொருவர் காதலை வெளிபடுத்தும் வலிமையான வார்த்தையாகவும் உருவெடுத்தது. அப்படிப்பட்ட பூக்கி காதல் ஜோடியான நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா, தங்களுக்கு இடையே ஏற்படும் சிறு கருத்தியல் மோதலால் பிரிந்து விடுகிறார்கள். காதலர்கள் பிரிந்தாலும், அவர்களால் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். தங்களது காதல் பிரிவு தவிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அது தோல்வியில் முடிய, காதல் பிரிவு வலிக்கு மருந்து மற்றொரு காதல் தான், என்ற மனநிலைக்கு வருகிறார்கள். அதன்படி, இருவரும் வெவ்வேறு காதலை நோக்கி பயணிக்க, அந்த கதல் அவர்களது காதல் பிரிவு வலிக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? இல்லையா ?, என்பதை இளமை ததும்ப தடும்ப சொல்வது தான் ‘பூக்கி’.


 


காதல் பிரிவு மற்றும் அதை எதிர்கொள்ளும் தற்போதையை காலக்கட்ட இளைஞர்களின் வாழ்வியலை, கலகலப்பாக சொல்லியிருப்பதோடு, எந்த காலக்கட்டத்திலும் காதல் உணர்வு மாறுவதில்லை, என்பதையும் அழுத்தமாக பதிவு செய்ய இயக்குநர் கணேஷ் சந்திரா முயற்சித்திருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், துடிப்பு மிக்க நடிப்பால் கவர்கிறார். காதல் பிரிவு வலியை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது, அதில் இருந்து விடுபட வேறு தளங்களில் பயணித்து, அதனால் பாதிப்பு அடைவது, என்று படம் முழுவதும் பல உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பல உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, தன் தந்தை பற்றி காதலியின் தந்தை தரக்குறைவாக பேசும் காட்சி, அப்பாவின் கனவை நிறைவேற்றி அவர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும் காட்சி ஆகியவற்றை சொல்லலாம். அவரது குரலும் கம்பீரமாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும் ஒரு நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா, எளிமையான அழகோடு கவர்கிறார். ஹீரோவுக்கு நிகராக நடிப்பில் அசத்தியிருப்பவர் நடனத்திலும் அசத்துகிறார். அழுத்தமான காட்சிகளில் மிக அசால்டாக நடித்து, யாருப்பா இந்த பொண்ணு ?, என்று வியக்க வைத்திருக்கிறார்.


 


பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள் இசையுடன் படத்தொகுப்பு பணியையும் சேர்த்து கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காதல் உணர்வுகளை கசக்கி பிழிகிற ஒரு கதைக்கு பாடல்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விஜய் ஆண்டனி மறந்துவிட்டு இசையமைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. படத்தொகுப்பாளராக முதல் பாதி படத்தை பலவித குழப்பங்களோடு நகர்த்தி செல்லும் விஜய் ஆண்டனி, இரண்டாம் பாதி படத்தை தெளிவாக சொல்லி பார்வையாளர்களை கதையோடு ஒன்றிவிட செய்து விடுகிறார். புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின் வலியை ஜாலியாக சொன்னாலும், இறுதியில் காதல் வலியின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரக்கூடிய விதத்தில் சொல்லி விடுகிறது. காதல் தோல்வி கொடுக்கும் வலிக்கு மருந்து மற்றொரு வலியா அல்லது காதலா என்பதை, தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய பரிதியின் எழுத்து இருந்தாலும், அதற்கான காட்சிகளில் புதுமை இல்லாதது படத்தை பலவீனமடைய செய்கிறது.


 


ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, காதல் கதையாக அல்லாமல் காதல் பிரிவு கதையை, நவீன இளைஞர்களின் உலகத்தின் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் மேற்கொண்ட வேகம் படத்தை தொய்வின்றி நகர்த்தினாலும், அதர பழசான காட்சிகள் மற்றும் சுவாரஸ்யம் இல்லாத திருப்பங்கள் மூலம் படம் பெரிதாக பாதிக்கவில்லை. மொத்தத்தில், ‘பூக்கி’ காதல் பிரிவு வலியை சரியாக கடத்தவில்லை.