முதல் பக்கம் விமர்சனம்
தயாரிப்பு : மகேஸ்வரன்தேவதாஸ், சின்னதம்பி புரடக்சன்ஸ்
இயக்கம் : அனிஸ் அஷ்ரப்
நடிப்பு : வெற்றி, தம்பி ராமையா, ஷில்பா மஞ்சுநாத், மகேஸ்தாஸ், ரெடின் கிங்ஸ்லி
இசை : ஏஜெஆர்
ஒளிப்பதிவு : அரவிந்த் மறைந்த கிரைம் நாவலாசிரியர் ஒருவரின் மகன் வெற்றி, தனது தந்தை குறித்து உருவாகும் ஒரு புத்தக வேலைக்காக சென்னை வருகிறார். அப்போது சென்னையில் தொடர் கொலைகள் நடக்கின்றன. போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பிராமையாவுடன் இணைந்து தனது 'புத்திசாலிதன' மூளையை பயன்படுத்தி, அந்த கொலைக்கான காரணம், கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் தம்பி ராமையா செல்ல மகள் தற்கொலை செய்கிறார். அதற்கு காரணம் என்ன? தம்பி ராமையா, வெற்றி இணைந்து கொலையாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள், இது தான் சென்னை பைல்ஸ் ; முதல்பக்கம் கதை. எழுத்தாளர் மகன், தொடர் கொலைகள், சற்றே விகார தோற்றம் கொண்ட கொலையாளி, போலீஸ் துப்பறிதல், அதற்கு வெற்றி உதவுதல், அடுத்தடுத்த கொலைகள் என கதை செல்கிறது. ஹீரோ வெற்றி கெட்-அப், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே வீக். ஹீரோவுக்கான எந்த விஷயமும் இல்லாமல் அவரை பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். அதிலும் ஒரு கிரைம் கதாசிரியர் மகன், கிரைமை கண்டுபிடிக்க உதவி செய்வது நம்ப முடியாத கற்பனை. அதை எப்படி போலீஸ் டிபார்ட்மென்ட் ஏற்றுக் கொள்கிறது. கடைசியில் தம்பி ராமையாவுக்காக ஒரு விஷயம் செய்கிறார் வெற்றி படத்தில் அது மட்டுமே உருப்படி. ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத், போலீசாக வரும் நயினா சாய் அழகாக இருக்கிறார்கள். எந்த சீனிலும் பெரிதாக நடிக்கவில்லை. மாறாக, தம்பி ராமையா ஓவராக நடிக்கிறார். காமெடி போலீஸ் மாதிரி பேசுகிறார். அவருக்கும், அவர் மகளுக்குமான அந்த பாசப்பிணைப்பு மட்டுமே மனதில் நிற்கிறது. வில்லனாக வரும் மகேஷ் தாஸ் தான் படத்தின் தயாரிப்பாளர். அவருக்கு நிறைய பில்டப் சீன், கடைசி சண்டைகாட்சியில் கூட ஹீரோவை விட அவருக்கு அதிக முக்கியத்துவம், பின்னே தயாரிப்பாளர் ஆச்சே. அவர் ஏன் அப்படி மாறுகிறார், ஏன் கொலை செய்கிறார் என்ற விஷயத்தில் அழுத்தம் இல்லை. அதுவே கதையின் மைனஸ் ஆக இருக்கிறது. தம்பி ராமையா மகளின் நண்பர்களாக வரும் மேலிடத்து பிள்ளைகளின் நடிப்பும், கேரக்டரும் கதையுடன் நன்றாக செட்டாகி இருக்கிறது. அவர்களை ஹீரோ நடத்தும் விதமும் சபாஷ். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை தேவை, நாட்டில் சபலபுத்திக்காரர்கள் அதிகம், பெண்கள் உஷாராக இருக்கணும் என்ற நல்ல கருவை, கிரைம் திரில்லர் பாணியில் சொல்ல முயற்சி செய்து தடுமாறி இருக்கிறார் இயக்குனர் அனிஸ் அஷ்ரப். ஹீரோ மற்ற கேரக்டரும் கதைக்கு சப்போர்ட் பண்ணவில்லை. அதிலும் கிரைம் கதைக்காக விறுவிறுப்பு, திருப்பங்கள் அதிகம் இல்லாதது, அது அழுத்தமாக இல்லாதது பெரிய குறை. கடைசி நாலைந்து சீன், அதில் சொல்லப்படும் விஷயங்கள் சரி, அதுக்காக ஒரு முழு படத்தை பார்ப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
சென்னை பைல்ஸ் : முதல் பக்கம் - ஆமா, கதையில் கடைசி பக்கம் மட்டுமே தேறுகிறது ,