-


Loading latest news...

Balti Review

 Balti Review Cast : Shane Nigam Shanthnu Selvaraghavan Alphonse Puthren Preethi Asrani CREW Director: Unni Sivalingam Producers: Santosh T. Kuruvilla & Binu George Alexander Co-producer - Sherin Rachel Santhosh Written By : Unni Sivalingam Banner: STK Frames Editor : Shivkumar V. Panicker Music: Sai Abhyankkar Dop : Alex J. Pulickal Art Director: Ashik S. Dialogues : T. D. Ramakrishnan Executive Producer: Sandeep Narayan Tamil Nadu Distribution : Future up & AGS Audio Label: Think Music Production Designer – Viyaaki / Vivaki, Antony Stephen PRO:Yuvraaj

பல்டி’ திரைப்பட விமர்சனம் 

கபடி விளையாட்டு வீரர்களான ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களது நண்பர்கள் விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி தன் பக்கம் இழுக்கும் கந்து வட்டி மாஃபியா செல்வராகவன், கபடி களத்தை மறக்கடித்து, தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார். இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள, அதில் இருந்து மீண்டார்களா ? இல்லையா ? என்பதை ஆக்‌ஷன் பாணியில் சொல்வதே ‘பல்டி’

 

நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல்மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஷேன் நிகம், கபடி போட்டியிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி, வேகமாக செயல்பட்டு வியக்க வைக்கிறார். ஷேன் நிகமின் நண்பராக மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து அசத்தியிருக்கிறார்.  நல்லவரா அல்லது கெட்டவரா என்று புரிந்துக்கொள்ள முடியாத கதாபாத்திறத்திற்கு தனது நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

 

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் திரை இருப்பு கவனம் ஈர்த்தாலும், அவருக்கான முக்கியத்தும் மிக குறைவாகவே உள்ளது.

 

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருக்கும் பீஜியம்கள் கவனம் ஈர்க்கின்றன. அதே சமயம், அனிருத் இசையை கேட்டது போலவும் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை, ஆனால் காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.

 

படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பனிக்கரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. காட்சிகளை தொகுத்த விதம் மிக கூர்மையாக இருந்தாலும், அதில் இருக்கும் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். செல்வராகவன் மீது அடி விழும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் தனது கத்திரி மூலம் தனி கதை சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் தனது அசத்தலான கட் மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்தாலும், அதன் நீளத்தின் மூலம் சற்று சோர்வடைய செய்துவிடுவதையும் மறுக்க முடியாது.

 

எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார்.

 

கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை, என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் திரைக்கதை, மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. சண்டைக்காட்சிகளின் நீளம் சற்று தொய்வடைய செய்தாலும், சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் புதிய யுத்திகள் அந்த குறையை மறந்து ரசிக்க வைக்கிறது.  

வித்தியாசமாகவும், புதிதாகவும் எதுவும் இல்லை என்றாலும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், காட்சிகள் மற்றும் திரைக்கதையை வேகமாக நகர்த்தி சென்றது என்று முழுமையான கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் உன்னி சிவலிங்கம், கபடி அணிகளுக்கு பஞ்சமி, பொற்றாமரை என்று பெயர் வைத்ததோடு, உதயசூரியன் என்ற மலையாளப் பாடல் மூலமாக மறைமுகமாக அரசியல் பேசி அமர்களப்படுத்தியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘பல்டி’ சாம்பியன்ஸ்.