மிராய் சினிமா விமர்சனம்
மிராய் சினிமா விமர்சனம் : மிராய் கற்பனை கலந்த பிரம்மாண்ட படைப்பில் நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராக மிரள வைத்து மிரட்டியுள்ளது பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத், க்ரிதி பிரசாத் தயாரித்திருக்கும் மிராய் படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் கட்டம்னேனி.
இதில் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்து-மணிபாபு கரணம், கார்த்திக் கட்டம்னேனி, இசை-கௌரா ஹரி, கலை இயக்கம்-ஸ்ரீ நாகேந்திர தங்காளா, படத்தொகுப்பு-ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவு- கார்த்திக் கட்டம்னேனி, வசனம்-மணிபாபு கரணம். தயாரிப்பு வடிவமைப்பாளர்- ஸ்ரீ நாகேந்திர தங்காளா, மக்கள் தொடர்பு- யுவராஜ் கி.மு 232 நூற்றாண்டுகளுக்கு முன்னர், கலிங்கப் போரின் இரத்தக்களரியால் பேரழிவிற்குள்ளாகும் போது மனம் வருந்தும் பேரரசர் அசோகா, அழியாத சக்தி இரகசியத்தை ஒன்பது புனித புத்தகங்களாக பதிவிட்டு, அவற்றை மிகவும் விசுவாசமான பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கிறார். பல தலைமுறைகள் கடந்த பிறகு, 2000 ஆம் ஆண்டில், ஒன்பதாவது புத்தகத்தின் பாதுகாவலராக எதிர்காலத்தை கணிக்கும் திறனுடன் ஆசீர்வதிக்கப்பட்ட திறமை மிகுந்த பெண் அம்பிகாவைச் (ஸ்ரேயா சரண்) சுற்றி கதைக்களம் நகர்கிறது. இந்நிலையில் சிறு வயதில் ஒதுக்கப்பட்டு, அவமானத்திற்குள்ளாகி பல தந்திர வித்தைகளை கற்று, தீய எண்ணத்துடன் வளர்ந்து உலகத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு ஆட்டி படைக்க நினைத்து ஒன்பது அரிய புனித புத்தகங்களை அடைய மகாபீர் லாமா (மஞ்சு மனோஜ்) ஆசைப்படுகிறார். மகாபீர் லாமா தன்னுiடய தந்திர மாய வித்தைகள் செய்யும் பிளாக் வாளை பயன்படுத்தி, ஏழு புத்தகங்களை கைப்பற்றி அதனை பாதுகாக்கும் பாதுகாவலர்களை அழித்து எழுச்சியுடன் முன்னேறி வருகிறார். இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய அறிவு திறமையால் அறிந்துக் கொள்ளும் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகா மகாபீரை அழிக்க ஒரே வழி தன் மகன் தான் என தெரிந்துக்கொள்கிறார். அதற்காக தன் குழந்தை பிறந்த பிறகு தாய் பாசம் இல்லாமல் அனாதையாக விட வேண்டும், கடைசியாக அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதமான மிராய்யை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்ற விதியை இமாலயத்துறவி மூலம் அறிந்து கொள்கிறார். அதன்படியே மகன் வேதா பிரஜபதி (தேஜா சஜ்ஜா) பிறந்த பிறகு அனாதையாக வாரணாசியில் விட்டு விடுகிறார். 24 வருடங்கள் தன் மனம் போனபடி சுற்றித் திரிந்து வளரும் வேதா பிரஜபதி (தேஜா சஜ்ஜா) பல மாநிலங்களை கடந்து இறுதியாக ஹைதராபாத்தில் வித்தியாசமான பொருட்களை செய்து விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இதனிடையே அம்பிகா வாழ்ந்த இடத்திலிருந்து விபா (ரித்திகா நாயக்) என்ற இளம் துறவி ஒன்பதாவது புத்தகத்தை கைப்பற்ற மகாபீர் லாமா சில வாரங்களுக்குக்குள் வருவதை அறிந்து, வேதா பிரஜபதி தேடி அலைந்து கண்டுபிடிக்கிறார். விபா வேதாவிடம் நடக்க போகும் விபரீதத்தை விவரிக்க முயற்சிக்கும் போதெல்லாம் அதை கிண்டலாக கடந்து போகிறார். பல விபரீத நிகழ்வுகளுக்கு பிறகு உண்மையான காரணத்தை அறிந்து வேதா மிராய்யை தேடி இமயமலைக்கு செல்கிறார். இறுதியில் வேதா கையில் மிராய் கிடைத்ததா? மகாபீரைத் தடுக்க வேதாவால் முடிந்ததா? புனித புத்தகங்கள் உண்மையிலேயே தோன்றும் அளவிற்கு சக்திவாய்ந்தவையா? மகாபீர் தன் சக்திகளை பயன்படுத்தி வெற்றி கண்டாரா? விபா (ரித்திகா நாயக்) என்ன ஆனார்? மிராய்க்கும் பிளாக் வாளுக்கும் நடக்கும் கடைசி யுத்தம் என்ன? என்ற பல புதிரான கேள்விகளுக்கு பழமையும், புதுமையும், புராண கற்பனை கலந்த மோதல் கதைக்கு பதில் படத்தில் காணலாம். ஹனுமான் வெற்றிக்கு பிறகு வேதா பிரஜபதி என்ற புதிய அவதாரத்தில் தேஜா சஜ்ஜா கவலையற்ற இளைஞனாகவும், உறுதியான கொள்கையுடன் மாறும் சக்தி மிகுந்த இளைஞனாகவும் இரண்டு வித கோணங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். புதிய ஸ்டைல், புதிய தோற்றம் துள்ளலான மனோபாவத்துடன் தேஜா சஜ்ஜா குறிப்பிடத்தக்க எளிமையுடனும் நம்பிக்கையுடனும் படத்தை தனது தோள்களில் சுமந்து செல்கிறார். தன்னை தாக்க வரும் அடியாட்களை அடித்து நொருக்கி, மகாபீர் உடன் நடக்கும் சண்டை காட்சிகளில் திறமையாக ஆற்றலால் வசீகரித்து, தாய் விட்டு சென்ற பணியை வெற்றிகரமாக செய்து முடிக்கும் பாசமுள்ள மகனாக மிளிர்கிறார். பிரபஞ்சத்தை அழிக்க நினைக்கும் மகாபீர் லாமா என்ற உறுதி மிக்க சக்திவாய்ந்த தோற்றத்துடன் வில்லனாக எதிரியாக மஞ்சு மனோஜ். அவரது உக்கிரமான கண்கள், கட்டளையிடும் கம்பீரமான குரல் மற்றும் அசாத்திய தைரியத்துடன் அனைத்தையும் செய்யும் செயல் திறன் என்று மிடுக்கான மகாபீர் லாமாவாக சரியான பொருத்தமாக அமைந்துள்ளார். மனோஜ் தோன்றும் ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய இருப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
ஸ்ரேயா சரண் சக்தி வாய்ந்த பெண்மணியாக, தாயாக, ஒரு ஊரையே காக்கும் தெய்வ சக்தியாக தன்னுடைய ஆற்றலால் கவர்ந்திழுந்துள்ளார். அவர் படத்தின் முக்கிய புள்ளியாக இருந்து வழிநடத்துவதும், தன்னுடைய செயல்திறனால் கதைக்கு உணர்ச்சி ஆழத்தை சேர்த்து, மகனை முன்னோக்கி செல்ல வழி வகுத்து அழுத்தத்துடன் தீர்க்கமான பங்களிப்பை கொடுத்துள்ளார். இளம் துறவியாக ரித்திகா நாயக் பங்களிப்பு வேதாவை கண்டுபிடிப்பது மட்டுமே என்பதால் படத்தின் ஆரம்ப காட்சிகளுக்கு வலு சேர்த்து கதைக்கான அச்சாரமாக விளங்குகிறார்.
ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு நடுவே திருப்புமுனை கதாபாத்திரங்களாக தங்களுடைய தேர்ந்த நடிப்பை வழங்கி விட்டு செல்கின்றனர்.
இசை-கௌரா ஹரியின இசை, வேதங்களின் பின்னணி இசை பல காட்சிகளை மயிர்கூச்செரியும் அனுபவங்களாக மாற்றுகிறது. வித்தியாசமான ஒலி எழுப்பும் ஆயுதங்களை பயன்படுத்தும் சண்டை காட்சிகள் உலகத்தரம்.
வி.எஃப்.எக்ஸ் வியக்கத்தக்க வகையில் மெருகூட்டப்பட்டு குறிப்பாக பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் காட்சிப்படுத்தபட்ட விதம் அருமை.
கலை இயக்குனர் ஸ்ரீ நாகேந்திர தங்காளா அர்ப்பணிப்பு படத்தின் வெற்றிக்கு அச்சாணி. படத்தொகுப்பு-ஸ்ரீகர் பிரசாத் மற்றும் கதை வசனம் எழுதியிருக்கும் மணிபாபு கரணம் மற்றும் கார்த்திக் கட்டம்னேனி பங்களிப்பு நவீனத்துத்துவத்துடன் புராணங்களை புத்திசாலித்தனமாக கலந்து படத்தின் அனைத்து காட்சிகளுக்கும் அளப்பரிய பணியை செய்து முடித்துள்ளனர்.
கார்த்திக் கட்டம்னேனி கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று பல தொழில்நுட்பங்களை நுணக்கமாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.படத்தின் முதல் பாதி கணிக்கக்கூடியதாக விறுவிறுப்பான திரைக்கதை இரண்டாவது பாதி மிகவும் வலுவானது, கணிக்க முடியாத திருப்பங்களுடன் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஒரு கற்பனை கலந்த புராண, நவீன கதைச்சொல்லலுடன் கண்கவர் காவியமாக திரையில் படைத்துள்ளார். வேதத்தின் அடையாளத்திலிருந்து ஸ்ரீராமரின் தெய்வீக தோற்றம், சித்த க்ஷேத்ராம், ஷோடவுன் மற்றும் சம்பதி பறவை காட்சிகள் தத்ரூபமாக கொடுத்து மெய் சிலிர்க்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி.படம் பெரிய திரை அனுபவத்துடன் பார்வைக்கு பிரம்மாண்டத்துடன் பிரமிக்க வைக்கும், மற்றும் கற்பனை மற்றும் கண்கவர் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளில் நிரம்பிய மிராய் ஒரு மறக்கமுடியாத சாகசத்துடன் புராண காவிய கற்பனை கதையாக உற்சாகமாக கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி.மிராய் மிரள வைத்து மிரட்டியுள்ளது.