மெசஞ்சர்( பட விமர்சனம்)
படம்: மெசஞ்சர்
நடிப்பு:
ஶ்ரீராம் கார்த்திக், மனிஷா ஶ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி, ஜீவா ரவி, லிவிங்ஸ்டன்
தயாரிப்பு: பி.விஜயன்
இசை:அபுபக்கர் எம்.
ஒளிப்பதிவு:பால கணேசன் ஆர்
இயக்கம்:
ரமேஷ் இளங்காமணி
பி ஆர் ஓ: சதீஸ்வரன் காதலில் தோல்வியடைந்த சக்திவேலன் (ஸ்ரீராம் கார்த்திக்) தூக்கு மாட்ட செல்கிறான் அப்போது செல்போனில் மெசேஜ் வருகிறது. அதில், சிநீங்கள் சாக வேண்டாம் உயிருடன் இருக்க வேண்டும்’ என்று தகவல் இருக்கிறது. யார் இந்த மெசேஜ் அனுப்பியது என்று கேட்டபோது, சிநான் இறந்து விட்டேன் உங்களை எனக்கு தெரியும் சிஎன்று பதில் வருகிறது. அதிர்ச்சியடைந்த சக்திவேலன். இது உண்மையா என்று கண்டுபிடிக்க புறப்படுகிறான். விசாரணையில் மெசேஜ் அனுப்பிய ஆனந்தி (பாத்திமா) என்ற பெண் சமீபத்தில் விபத்தில் இருந்தது தெரிய வருகிறது. தன் தற்கொலையை தடுத்த ஆனந்தியுடன் வாழ்க்கையை தொடர சக்திவேலன் எண்ணுகிறான். விபரீதம் எங்குபோய் முடிகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
இது ஒரு பேய் கதை தான்.. ஆனால் பயமுறுத்தாத காதலிக்கும் பேய். கேட்கும்போது வித்தியாசமாக இருக்கிறதா? கதையும் அப்படித்தான் நம்ப முடியாமல் இருக்கிறது.
காதலில் தோல்வியடைந்த ஸ்ரீராம் கார்த்திக் தூக்கு போடு வதுதான் தொடக்க காட்சி.. யாரை காதலித்தார்.. எவ்வளவு நாள் காதலித்தார் என்பது எதுவுமே தெரியாமல் கண் கட்டி வித்தை போல் பிளாஷ்பேக் தொடங்குகிறது.
சினிமா பாஷையில் சொல்ல வேண்டு மென்றால், கட் செய்தால்..
ஒரு கிராமம்
அங்கு இரண்டு தோழிகள். ஒருவர் பாத்திமா இவர் தான் ஆவி காதலி. தனது செல்போனை வைத்து பேஸ்புக்கில் ஸ்ரீராம் கார்த்திக் உடன் தோழியாக இணைகிறார். அதன் பிறகு இருவருக்கும் மெசேஜ் பரிமாற்றம் நடக்கிறது.
ஒரு சமயம் காதல் தோல்வி என்று ஸ்ரீராம் கார்த்திக் மெசேஜ் போடும்போது அதை பார்த்து சோகமடையும் பாத்திமா ஆறுதல் கூறுகிறார். அதே சமயம் அவர் விபத்திலும் இறந்து விடுகிறார்.
வழக்கமாக பேய் கதை என்றால் ஒன்று ஆளை பயமுறுத்தும், அல்லது சந்தானம் போன்ற நடிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டு காமெடியாக மாறிவிடும். ஆனால் இந்த படத்தில் வர பேய் கண்ணுக்கும் தெரியவில்லை, பயமுறுத்தவும் இல்லை, காமெடியாகவும் மாறவில்லை எல்லாவற்றிற்கும் மாறாக காதல் பேயாக மாறுகிறது.
இது என்னடா ஒரே குழப்பம் என்று கேட்கிறீர்களா.
கதையும் அப்படித்தான் குழப்புகிறது..
“ஏன் இப்படி பயமுறுத்தலே இல்லாமல் ஒரு பேய் கதை எடுத்தீர்கள் ?” என்று இயக்குனரிடம் கேட்டால் “வித்தியாசமாக இருக்க வேண்டும், இரண்டு ஆன்மாக்கள் இடையே நடக்கும் காதலை உணர்வு மூலமாகத்தான் உணர முடியும்” என்கிறார். இயக்குனரின் பதில் திருப்தியாக இருந்தால் காதலில் தோல்வி அடைந்தவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். காதல் தோல்வி தற்கொலைக்கு வழி அல்ல என்ற ஒரு கருத்தும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருப்பதுஒரு பாசிடிவ் மெசேஜ்
கண்ணுக்குத் தெரியாத ஆவியாக வரும் காதல் பேய் மாமியாருடன் பேசுகிறது, சண்டை போடாமல் சமையலுக்கு உதவி செய்கிறது, காதலனுக்கு கண்ணுக்கு தெரியாத சுகத்தை அளிக்கிறது.. இது எல்லாமே நாம் படத்தில் காட்சிகளாக காண முடியாது மனதில் தான் காட்சியாக பதித்துக் கொள்ள வேண்டும்..
ஹீரோவாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் செல்போனிலேயே ஆவியுடன் காதலித்து எப்படித்தான் நடித்தாரோ.. எல்லாமே கற்பனை ஆகிவிட்டது.. பெட்ரூம் காட்சி கூட அவருக்கு கற்பனைதான் என்ன செய்வது அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.. ஸ்ரீராம் கார்திக்கின் காதலியாக நடித்திருக்கும் மனிஷா மீண்டும் எக்ஸ் காதலியாக வந்து ஸ்ரீராமுக்கு பிராக்கெட் போடுவது தேவையில்லாத காட்சிகள்..
பி.விஜயன் படத்தை தயாரித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அபுபக்கர் எம். பேய் கதை என்பதை மறந்துவிட்டு எல்லா காட்சிகளிலும் மனதை வருடும் மெல்லிசை மெட்டை அமைத்திருக்கிறார்.
கிராமத்து காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பால கணேசன் ஆர் விக்கிரவாண்டி கிராமத்து பகுதியை மனதிற்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார்
இயக்குனர் ரமேஷ் இளங்காமணி பேய் கதையை உணர்வுபூர்வமான காதல் கதையாக சொல்ல முயன்றிருக்கிறார். லாஜிக் தவறுகள் ஏராளமாக இருந்தாலும் என்னதான் கிளைமாக்ஸ் என்று அறிய இறுதி வரை அமர வைத்து விடுகிறார்.
மெசஞ்சர் – ஆவியுடன் ஒரு காதல்..
