ஆண் பாவம் பொல்லாதது (பட விமர்சனம்)
ஆண் பாவம் பொல்லாதது
நடிப்பு: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர், ஏ வெங்கடேஷ்
தயாரிப்பு: வெடிக்காரன் பட்டி எஸ் சக்திவேல்
இசை: சித்து குமார்
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
இயக்கம்: கலையரசன் தங்கவேல்
பிஆர்ஓ: சதீஷ்குமார் (S2 Media)
மாளவிகாவை பெண் பார்க்கச் செல்லும் ரியோராஜ் அவரை பிடித்துப்போகவே மணந்து கொள்கிறார். ஒன்றரை வருடம் சந்தோஷமாக செல்லும் இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று ஈகோ குறுக்கிடுகிறது. இது முற்றி விவாகரத்து கேட்டு மாளவிகா கோர்ட்டுக்கு செல்கிறார். ஆனால் அவருடன் வாழ விரும்புவதாக ரியோ ராஜ் கோர்ட்டில் பதில் சொல்கிறார். இதனால் விவாகரத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் முடிவு எப்படி அமைகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஆண்பாவம் பொல்லாதது டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே படம் வித்தியாசமாக இருக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கிறது என்று அடித்து சொல்லலாம்..
ரியோ ராஜும் மாளவிகாவும் வீட்டில் வேலைகளை பகிர்ந்து செய்வதில் பிரச்சனை ஏற்படுவதெல்லாமே தினம் தினம் 2கே கிட்ஸ் இளம் தம்பதிகளின் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட காட்சிகள்..
வேலைக்கு சென்று வரும் கணவனுக்கு சாப்பாடு கூட செய்து வைக்காமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக நடனம் ஆடிக்கொண்டிருப்பதும் அது பற்றி கேட்டால் மாளவிகா கோபத்தில் பொங்குவதும் உக்கும் என்ற முணுமுணுப்பை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு அப்பாவுக்கு பயந்து இன்ஸ்டாகிராமில் கூட கால் வைக்காத பல இளம் பெண்கள் திருமணத்துக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக மாறி கணவர் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை காலி செய்யும் சம்பவங்கள் மட்டுமல்லாமல் இப்படத்தில் வரும் எல்லா காட்சிகளும் ஏதாவது ஒரு விதத்தில் ஒவ்வொரு 2கே கிட்ஸ் வாழ்க்கையிலும் கண்டிப்பாக நடந்திருக்கும் என்பதால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் கதையில் மூழ்கி விடுகிறார்கள். சீனுக்கு சீன் கைதட்டலும், விசில் சத்தமும் அரங்கை ஆக்கிரமிக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதி கோர்ட் விவாகரத்து வழக்காக படமாக்கப்பட்டிருந்தாலும் அதிலும் எப்படி சுவாரசியத்தை சேர்க்கலாம் என்று ஒரு டீமே இணைந்து செயல்பட்டிருப்பது காட்சிகளுக்கு கிடைக்கும் அப்ளாஸ் மூலம் தெரிகிறது. ரியோ ராஜம் சரி, மாளவிகாவும் சரி அசல் தம்பதிகளாகவே மாறிவிட்டார்களோ என்று எண்ணும் அளவுக்கு அவ்வளவு ஈடுபாட்டை தங்களது கதாபாத்திரங்களில் காட்டியிருப்பது காட்சிகளை உயிரூட்டு கிறது.
வழக்கறிஞராக வரும் வி ஜே விக்னேஷ் காந்த் கோர்ட்டில் பரபரப்பு காட்டாவிட்டாலும் கோர்ட்டுக்கு வெளியே செண்டிமெண்ட் காட்சிகளில் உருக்கத்தை காட்டி கண்கலங்க வைத்து விடுகிறார். ஷீலா மற்றொரு வழக்கறிஞராக அடாவடி காட்டி நடித்திருக்கிறார்.
விக்னேஷ், ஹீலா இவர்களுக்குள் இருக்கும் ஒரு சஸ்பென்சும் சென்டிமென்ட்க்கு துணை நிற்கிறது.
விக்னேஷின் உதவியாளராக நடித்திருக்கும் ஜென்ஸ் திவாகர் தங்களை பின்தொடரும் நபரை ஒவ்வொரு இடத்திலும் வெச்சி செய்வது அரங்கை கலகலப்பாக்குகிறது. வெடிக்காரன் பட்டி எஸ் சக்திவேல் படத்தை தயாரித்திருக்கிறார்.
சித்து குமார் இசை பாடல், பின்னணி இசையில் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது.
மாதேஷ் மாணிக்கம் கேமரா காட்சிகளை பளிச்சிட வைக்கிறது
கலையரசன் தங்கவேல் இயக்கியிருக்கும் முதல் படமே பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. 2கே கிட்ஸ் இளம் ஜோடிகளின் மனநிலையை வெளிப்படுத்தி அவர்களுக்கு இடையேயான ஈகோவை உடைத்திருக்கிறார்.
ஆண்பாவம் பொல்லாதது – இது நடந்தால் கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் குறையும்.
