-


Loading latest news...

ராம் அப்துல்லா ஆண்டனி (பட விமர்சனம்)

 ராம் அப்துல்லா ஆண்டனி (பட விமர்சனம்) 


 படம்: ராம் அப்துல்லா ஆண்டனி

நடிப்பு: சௌந்தர் ராஜா, தீனா, வேல ராமமூர்த்தி, பூவையார், அஜய், அர்ஜுன், ஜாவா சுந்தரேசன்

தயாரிப்பு: அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ்

இசை : டி.ஆர்.கிருஷ்ண சேத்தன்

ஒளிப்பதிவு : எல்.கே.விஜய்

இயக்கம்: ஜெயவேல்

பிஆர்ஓ: ஜான்சன்

பூவையார், அஜய், அர்ஜுன் மூவரும் பள்ளி தோழர்கள். சிறுவன் ஒருவனை கடத்தி கொல்கின்றனர். சிறுவனின் தாத்தா வேல ராமமூர்த்தி போலீசில் புகார் தருவதுடன் பேரனை கொன்றவர்களை கண்டுபிடித்து கொலை செய்யுமாறு போலீஸிடம் கூறுகிறார். வேல ராமமூர்த்திக்கு நெருக்கமான போலீஸ் தீனா, மூன்று பள்ளி சிறுவர்களையும் கைது செய்து என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார். அதன் முடிவு என்னவாகிறது என்பது தான் கிளைமாக்ஸ் . சிறுவர்கள் நடிக்கும் படம் ஒரு கொலைகார படமாக எடுக்கப்பட்டிருக்கிறதே என்ற வருத்தம் படத்தின் முதல் பாதியை பார்க்கும்போது  ஏற்படுகிறது.

பூவையார், அஜய், அர்ஜுன் மூவரும் ராம் அப்துல்லா ஆண்டனியாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இயக்குனர் மீது ஒரு கோபத்தை தொடக்கத்தில் வர வைக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பகுதி முற்றிலுமாக மாறி வேறு ஒரு களத்துக்கு கதையையும், மூன்று சிறுவர்களின் கதாபாத்திரத்தையும் நகரத்துவது எதிர்பார்க்காத திருப்பம் மட்டுமல்ல சொல்ல வேண்டிய கருத்தை மனதில் இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு ஆவேசமாக இயக்குனர் சொல்லி இருக்கிறார் என்பதைத்தான் உணர முடிகிறது.

பூவையார், அஜய், அர்ஜுன் மூவரும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் தங்களது வயதுக்கு மீறிய நடிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்துகிறார்கள். சண்டைக் காட்சிகளிலும் தங்களது வயதுக்கு மீறிய கடினமான காட்சிகளை செய்திருக்கிறார்கள். திருக்குறள் சொல்லி குற்றங்களை நியாயப்படுத்தும் அஜய் கதாபாத்திரம் மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. திருக்குறளை தலைகீழாக சொல்லி முதல் பரிசு வாங்கும் மாணவராக அஜய் நடித்திருப்பது, நடிப்பாக மட்டுமல்ல அவர் உண்மையிலேயே திருக்குறளை படித்திருக்கிறார் என்பதை தெளிவாக உணரப்படுகிறது.

பூவையார், அர்ஜுன் இருவரும் முதல் பாதியில் கொடூரத்தை வெளிப்படுத்துவதும் கிளைமாக்சில் தங்களது செண்டிமெண்ட்டை வெளிப்படுத்துவதும் இரு மாறுபட்ட நடிப்பு. அதற்காக அவர்கள் இருவருக்கும் மட்டுமல்ல மூன்றாவது சிறுவன் அஜய்க்கும் சேர்த்து பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வரும் சௌந்தரராஜன் ஏதோ ஒரு விஷயத்தை செய்ய காத்திருக்கிறார் என்பதை மட்டும் தொடக்க காட்சிகளில் அவரது நடிப்பின் மூலம் உணர முடிகிறது அந்த விஷயத்தை கச்சிதமாகவே செய்து முடித்து அப்ளாஸ் பெறுகிறார்.

இன்ஸ்பெக்டர் தீனா, வேல ராமமூர்த்தி முழு வில்லன்களாகவே மாறி இருக்கிறார்கள். நூல் இழையில் தீனா கதாபாத்திரம் தப்பித்துக் கொள்கிறது.

அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது

டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசை, காட்சிகளை வேகப்படுத்துகிறது எல்.கே.விஜய் ஒளிப்பதிவு படம் முழுவதும் சிவப்பு டோனை பரவச் செய்து டென்ஷன் ஆகவே வைக்கிறது.

இயக்குனர் ஜெயவேல் ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வந்திருக்கிறார் ஆனால் சிறுவர்களை வைத்து இவ்வளவு பயமுறுத்தியிருக்க வேண்டியதில்லை என்று தோன்றினாலும் அவர் சொல்ல வந்த கருத்தை கோபம் கொப்பளிக்க அம்மா சென்டிமென்ட்டுடன் சொல்லி மனதை சமாதானம் செய்கிறார்.

ராம் அப்துல்லா ஆண்டனி – மத பிரச்சார படம் அல்ல , புகை ஒழிப்பு பிரச்சார படம்.