-


Loading latest news...

நறுவீ (பட விமர்சனம்)

 நறுவீ (பட விமர்சனம்) 


படம்: நறுவீ

நடிப்பு ஹரிஷ் அலக்  விஷ்ணு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா,  காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால்

தயாரிப்பு: ஏ அழகு பாண்டியன்

இசை: அஸ்வத்

ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன்

இயக்கம்: சுபராக் முபாரக்

பி ஆர் ஓ: ஆர் மணி மதன்

நறுவீ  என்ற வித்தியாசமான டைட்டிலுடன் வந்திருக்கும் இப்படம் ஒரு சமூக அக்கறையுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லர் படம். குன்னூர் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு செல்லும் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.  இது அமானுஷ்ய சக்திகளின் வேலையாக இருக்கும் என்று பரவலாக பேசப்படும் நிலையில் ஐந்து பேர் அங்கு நடக்கும் மர்மம் என்ன  என்பதை அறிய செல்கிறார்கள். இந்த குழுவில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் உள்ளனர்.  உண்மையில் அங்கு ஆண்கள் மர்மமான முறையில் இறப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்த ஐந்து பேர் குழு கண்டுபிடித்ததா என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.

இதில் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரிஸ் சமூக அக்கறையுடன் கூடிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை கவர்கிறார்.

மலை கிராம மக்களுக்கு கல்வி அறிவு இல்லாத நிலையில் அங்குள்ள பெண் குழந்தை படிக்க வேண்டும் என்று ஆர்வத்தை ஹரிஷ் உண்டாக்குவது முற்போக்கான சிந்தனையின் பிரதிபலிப்பு. அதேசமயம் அவரது செயலுக்காக சந்திக்கும் ஆபத்துகள் ஹீரோவுக்கு என்ன நடக்குமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறது.  ஹீரோயின் பாடினி குமார்  பயமுறுத்தும் சத்தத்தைக் கேட்டு ஷாக் ஆகும்போது அரங்கில் ஒரு மயான அமைதியை ஏற்படுத்துகிறார். ஹீரோயின்களில் ஒருவரான வின்சு இவர் என்ன பாதிப்பை ஏற்படுத்து விடப் போகிறார் என்று அவர் மீது பெரிய கவனம் திரும்பாமல் இருக்கும் நிலையில்  அவர் எடுக்கும் ஒரு முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

தேயிலைத் தோட்ட முதலாளியாக வரும் மதன் எஸ் ராஜா வில்லனாக மாறி இருக்கிறார்.

மாதவி என்ற கதாபாத்திரத்தில் வரும் சிறுமி கதையின் கருவாக சுழல்கிறார். தன் மீது தான் இந்த கதை பயணிக்கப் போகிறது என்பதை உணர்ந்து அந்த பொறுப்புடன் பாத்திரத்தை மிளிரச் செய்கிறார்.

மேலும் பிரவீனா,  காத்தே, முருகானந்தம், பிரதீப், சாரதா நந்தகோபால் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மலைக்கிராம பகுதியில் நடைபெற்றிருக்கும் படப்பிடிப்பு கதைக்கு  உயிரோட்டம். ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரனின் கேமரா அப்பகுதியின் அடர் பசுமை காட்சிகளை நெஞ்சை கொள்ளை கொள்ளும் வகையில் அள்ளி வந்து இறைக்கிறது. அஸ்வத்தின் பின்னணி இசை ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது.

சமூகத்துக்கு ஒரு முக்கிய கருத்தை சொல்கிறோம் என்ற முனைப்பு இயக்குனர் சுபராக் முபாரக்கின் இயக்கத்தில் வெட்ட வெளிச்சம். சஸ்பென்ஸ் திரில்லர் ஒரு பிளஸ் பாயின்ட்டாக  இருந்தாலும் திரைக்கதையில் இன்னமும் வேகத்தை கூட்டி இருந்தால் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

தயாரிப்பாளர் ஏ.அழகுபாண்டியன் நாமும் ஒரு படம் எடுத்தோம் என்றில்லாமல் அவரது சமூக அக்கறைக்கு ஒரு கைக்குலுக்கல்.

நறுவீ-  சஸ்பென்ஸ் திரில்லருடன் ஒரு கருத்து.