வீரவணக்கம் (பட விமர்சனம்)
படம்: வீர வணக்கம்
நடிப்பு: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், ரமேஷ், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ் , சித்தங்கண்ணா, ஆஷ்மிகா
இசை: எம் கே அர்ஜுனன், பெரம்பாவூர் ஜி ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி ஜே குட்டப்பன் மற்றும் அன்சல் உதயகுமார்
பாடல்கள்: நவீன் பாரதி
இயக்கம்: அனில் வி நாகேந்திரன்
பிஆர்ஓ: சதீஷ் , சிவா ( AIM) 1940 46 காலகட்டங்களில் கேரளாவில் கம்யூனிசம் தோன்றிய வரலாறு, அதனை தோற்றுவித்து தொழிலாளர்களுக்காக போராடிய கம்யூனிச தலைவர் பி. கிருஷ்ணன் பிள்ளை வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது
கதை: பண்ணையில் தொழிலாளர்கள் அடிமைத்தனமாக மேல்ஜாதி முதலாளிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். தங்கள் மீதான கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டும் என்று பெரு முதலாளிகளில் ஒருவரான பரத் கூறுகிறார். தொழிலாளர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு கம்யூனிச தலைவர் பி.வேணுபிள்ளையுடன் இணைந்து அந்த காலத்தில் ஜமீன்தார்களால் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட கொடுமையை எதிர்த்து போராடிய பி.கே மேதினியை சந்திக்க அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகப்படுத்தி கிருஷ்ண பிள்ளையின் போராட்ட வரலாறை கூறும்படி கேட்கிறார் அதை ஏற்று கிருஷ்ண பிள்ளையின் வரலாற்றை மேதினி விவரிப்பதே படத்தின் கதை. கேரள கம்யூனிஸ்ட் தலைவர் பி கிருஷ்ணபிள்ளையாக நம்மூர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, ஏழை மக்களை அடிமையாக நடத்தும் முதலாளித்துவ போக்கை எதிர்ப்பது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதென்றால் சமுத்திரக்கனிக்கு அவ்வளவு கனக்கச்சிதமாக பொருந்தும். இந்த படத்திலும் சமுத்திரக்கனிக்கு கிருஷ்ண பிள்ளையின் கதாபாத்திரம் அப்படித்தான் பொருந்தி இருக்கிறது.
பண்ணை ஆட்களை ஜமீன்தார் தனது அடியாட்களை வைத்து கொடுமை படுத்துவது, அவர்கள் வீட்டு பெண்களை சீரழிப்பது என கொடூரமான வில்லத்தனங்களை செய்யும்போது இந்த கொடுங்கோளனை தட்டிக் கேட்க சமுத்திரகனி எப்போது வருவார் என்ற ஆர்வம் சீனுக்கு சீன் அதிகரிக்கிறது.
எலுமிச்சை பழ வியாபாரியாக ஜமீன் தாரின் பண்ணைக்குள் சமுத்திரக்கனி நுழைந்து அங்குள்ள பண்ணை தொழிலாளர்களை தைரியமூட்டி ஜமீன்தாருக்கு எதிராக போராட்டக் குரல் எழுப்புவதற்கு ஆற்றும் உரைகளில் தீப்பொறி பறக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகிறது.
பெண்களை சீரழிக்க வரும் பண்ணையாரின் மகனை அடித்து விரட்டுவதாகட்டும், மேடை ஏறி தொழிலாளர் முன்னிலையில் எழுச்சி உரை நிகழ்த்தும்போதும் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதியாக கண்முன் நிற்கிறார் சமுத்திரக்கனி கம்யூனிச தலைவர் கிருஷ்ண பிள்ளையுடன் போராட்டக் களத்தில் பங்கேற்ற 96 வயதான பிகே மேதினி படத்தில் தனது ஒரிஜினல் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் தன்னை நாடி வந்த தொழிலாளர்களிடம் கிருஷ்ணன் பிள்ளையின் வரலாற்றை தனது சன்னமான குரலில் சாந்தமாக எடுத்துரைக்கும் போதும் அதில் ஒரு சிவப்பு சிந்தனை தோழரின் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது.
அணில் வி நாகேந்திரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். கம்யூனிச சிந்தனையை வரலாற்று ரீதியாக வெளிப்படுத்தி இருக்கும் விதம் அதில் திராவிட சித்தாந்தத்தை எடுத்துரைக்கும் பாங்கு எல்லாமே கருத்தாழம்மிக்கது. ஒரு சிவப்பு சிந்தனை கொண்ட தோழரால் மட்டும்தான் இத்தகைய படத்தை தர முடியும்.
வீரவணக்கம் – செங்கொடி வரலாறு.