BOMB movie Review
படம்: பாம்
நடிப்பு: அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி
தயாரிப்பு: சுதா சுகுமார்
இசை: டி இமான்
ஒளிப்பதிவு: பிஎம்.ராஜ்குமார்
கதை திரைக்கதை: மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்
வசனம்: மகிழ்நன் பிஎம்
இயக்கம்: விஷால் வெங்கட்
பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவாமலைப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது காளகம்மாபட்டி. இந்த ஊரில் உயர் ஜாதி, கீழ் ஜாதி என இரண்டு பிரிவினர் வசிக்கின்றனர். ஆனால் இரு பிரிவினருக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மோதல் ஏற்படுகிறது. போலீசார் கலெக்டர் என அரசு இயந்திரங்கள் வந்தும் இந்த மோதலை தீர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இயற்கை சீற்றத்தால் இந்த ஊர் காளப்பட்டி, கம்மாய் பட்டி என இரண்டாகப் பிரிகிறது. ஒரே ஊராக இருந்தபோது மயில் கூவ மலை உச்சியில் ஜோதி தரிசனம் தெரிந்த நிலையில் ஊர் பிரிந்த பிறகு அந்த நிலை மாறிவிடுகிறது. பிரிந்த ஊரை ஒன்று சேர்க்க வேண்டும் என்று அந்த ஊரில் வாழும் நண்பர்கள் கதிர் (காளி வெங்கட்), மணி (அர்ஜுன் தாஸ்) ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் கதிர் திடீரென இறக்கிறார். கதிர் மறைவை கேட்டு ஊர் மக்கள் ஒன்று திரள்கிறார்கள். அவருக்கு இறுதி சடங்கு செய்ய நான்கு பேர் அவரை தூக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் தூக்க முடியவில்லை. இதற்கிடையில் அவருக்கு அபான வாயு (குசு) வெளியேறிய வண்ணம் இருக்கிறது. அதைக் கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். கதிர் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறான் என்று மணி கூறினாலும் மக்கள் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் ஊர் பூசாரி, ‘சாமி வந்திருக்கு என்று கூறி இறந்து கிடக்கும் கதிரை சாமியாக்கி விடுகிறார். அதன் பிறகு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள்தான் கதை,
பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தான் பெரிய படங்கள், சிறிய நடிகர்களின் நடிக்கும் படங்கள் சிறிய படங்கள் என்ற ஒரு பாகுபாட்டை திரையுலகில் கட்டமைத்திருக்கிறார்கள். உண்மையில் சிறிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் அதுதான் பெரிய படம், பெரிய நடிகர்கள் நடித்தாலும் அதை ரசிகர்கள் ஏற்காவிட்டால் அதுதான் சிறிய படம்.
அந்த வகையில் சிறிய நடிகர்கள் நடித்து, சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் பாம் படம் தற்போது திரைக்கு வந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று பெரிய படமாகி. இருக்கிறது. கைதி, மாஸ்டர், குட் பேட் அக்லி போன்ற படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.“உங்களது கணீர் குரலுக்கு ஒரு சத்தம் போட்டு நூறு பேரை அடித்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்கள் என்று காதில் பூசுற்றும் கதையைக் கூறியிருந்தால் அதை அர்ஜுன்தாசும் நம்பி இருக்க மாட்டார், ரசிகர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் “உன் குரலுக்கு நீ ஒரு குரல் கொடுத்து ஒரு அடி முன்னே வைத்தால் இந்த ஊரே உன்னை பார்த்து பயப்படும் என்று அர்ஜுன் தாசை பார்த்து பாம் படத்தில் காளி வெங்கட் சொல்லும் அந்த வசனம் வரும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது பி எஸ் வீரப்பா போன்று குரல் வளத்தை கொண்டிருந்தாலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் தொடக்கம் முதல் கடைசி வரை பேசும் வசனங்கள் அத்தனையிலும் பணிவும், அடக்கமும், பாசமும், நட்பும், காதலும், ஒற்றுமை உணர்வும் வெளிப்பட்டிருக்கிறது. காளி வெங்கட் கூறியது போல் ஊரே ரெண்டு பட்டு நிற்கும்போது சாமி வந்தது போல் ஆடும் அர்ஜுன் தாஸ் முகத்தில் குங்குமத்தை பூசிக்கொண்டு கைகளில் வளையலை அணிந்து கொண்டு தனது உரத்த குரலில் குறி சொல்லும் போது அரங்கே அமைதியாகி விடுகிறது. பக்தி உணர்வு அதிகமாக இருக்கும் பெண்கள் சாமி வந்து கூட ஆடக் கூடும்.. சாதி வேற்றுமையால் ரெண்டு பட்டு நிற்கும் ஊரை ஒன்று சேர்க்க கனவு காணும் காளி வெங்கட் அது முடியாத வேதனையில் உயிர் விடுவதும் அதன் பிறகு அவர் நடத்தும் ஆட்டமும் உட்கார்ந்த இடத்திலிருந்து ஊரையே அல்லோகலப் பட வைத்து விடுகிறார்.
ஊர் நடுவே பிணமாக அமர்த்தபடி கிடந்து அவர்விடும் குசு சத்தத்தை கேட்டு ஊர் மக்கள் சாமி சாமி என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதெல்லாம் இன்னும் கூட அறியாமையில் கிடக்கும் மக்கள் கோடி பேர் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
காளி வெங்கட் ஒரு சில சீன்களில் மட்டும் உயிரோடு இருப்பது போல் நடித்துவிட்டு பின்னர் கிளைமாக்ஸ் வரை பிணமாக அமர்ந்திருக்கும் அந்த நடிப்பு நடிப்பதற்கு நிச்சயம் பொறுமை வேண்டும். அந்த பொறுமைதான் அவரை உயரத்துக்கு கொண்டு செல்கிறது.
ஊர் தலைவராக சிங்கம்புலி நடித்திருக்கிறார். மேலும் நாசர், அபிராமி, பால சரவணன், ஷிவாத்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யானை, ஆடு, மாடு, கோழி, ஈ, கொசு போன்ற எல்லாவற்றையும் வைத்து இயக்குனர்கள் படம் எடுத்து விட்டார்கள். கொசு எந்த படத்தில் நடித்திருக்கிறது என்று கேட்பார்கள் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் கொசுவை துரத்திக்கொண்டு ரஜினி செல்வார் இப்படி கூட காட்சி அமைத்திருக்கிறார்கள். ஆனால் குசுவை வைத்து இரண்டு ஜாதிப் பிரிவை ஒழிக்க முடியும் என்று இயக்குனர் விஷால் வெங்கட் இப்படத்தில் காட்டி இருப்பது ஜாதி என்பது குசுவுக்கும் கீழ் தான் என்று உணர்த்தி இருப்பது அரங்கில் கைத்தட்டல்களை அள்ளுகிறது.
இப்படத்தின் கதை காட்சி அமைப்புகள் மற்றும் வசனம் கருத்துடனும் ஆழத்துடனும் நம்பக தன்மையோடும் வந்திருப்பதற்கு மற்றொரு காரணம் கதை திரைக்கதை வசனம் என எல்லாவற்றுக்கும் குழுவாக இயங்கி செயல்பட்டிருப்பது தான் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது.பல படங்களில் இயக்குனரே எல்லா பணிகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் பல லாஜிக் மிஸ்டேக்குகள் படத்தை பல் இளிக்க வைத்து விடுகிறது. அந்த குருட்டு நம்பிக்கையை கைவிட்டு குழுவாக இணைந்து உருவாக்கும் போது நல்ல கதைகளை தர முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை பாம் நிரூபித்திருக்கிறது. படத்திற்கு டி இமான் இசை எவ்வளவு கை கொடுத்து இருக்கிறது என்றால் அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே கதையோடு பயணித்திருக்கிறது.
சுதா சுகுமார் ஒரு நல்ல படத்தை சமுதாயத்திற்கு தந்திருக்கும் பெருமையை பெற்றிருக்கிறார்.
பிஎம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு எந்த விதத்திலும் கண்களை கூசச் செய்யாமல் கிராமத்து சூழலுக்கு ரசிகர்களை அழைத்துச் சென்றிருக்கிறது.
பாம் – இது ஜாதி வெறியர்கள் மீது வீசப்பட்ட பாம்.